இன்கம்மிங்: பிரசாந்த் கிஷோருக்கு முக்கிய பதவி காங்.கில் விரைவில் பெரிய மாற்றம்; சோனியா கையில் முடிவு

புதுடெல்லி: ‘பிரசாந்த் கிஷோர் பிற கட்சிக்கு தேர்தல் பணி செய்வதை விட்டு, காங்கிரசுக்கு தன்னை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும்’என கட்சியின் சிறப்புக்குழு நிபந்தனை விதித்துள்ளது. விரைவில் நடக்க உள்ள பல்வேறு மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் மற்றும் 2024 மக்களவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த பல்வேறு பரிந்துரைகளை கட்சித் தலைவர் சோனியாவிடம், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் வழங்கி உள்ளார். இந்த பரிந்துரைகளை பரிசீலிக்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கொண்ட சிறப்பு குழுவை சோனியா அமைத்துள்ளார். அக்குழு தனது அறிக்கையை நேற்று முன்தினம் சோனியாவிடம் தந்துள்ளது. அதில், பிரசாந்த் கிஷோரின் பரிந்துரைகள் மட்டுமின்றி அவரை கட்சியில் இணைப்பது தொடர்பாக கட்சி மேலிடத்தின் விருப்பம் தொடர்பாகவும் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் வட்டார தகவல்கள் கூறுவதாவது: காங்கிரசில் பிரசாந்த் கிஷோரை சேர்க்க எந்த எதிர்ப்பும் இல்லை. கட்சி தலைமையும் அவரை கட்சியில் சேர்ப்பதென கிட்டத்தட்ட முடிவு செய்து விட்டது. பிரசாந்த் கிஷோருக்கு கட்சியில் எந்த பொறுப்பை தருவது என்பது மட்டுமே தற்போதைய கேள்வியாக உள்ளது. காங்கிரசில் இணையும் பட்சத்தில் பிரசாந்த் கிஷோர் இனியும் எந்த கட்சிக்கும் தேர்தல் வியூகம் வகுக்கும் பணியை செய்யக் கூடாது என சிறப்புக் குழு நிபந்தனை விதித்துள்ளது. முழுமையாக அவர் தன்னை காங்கிரசில் அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். அவரது பரிந்துரைகள் மற்றும் கட்சியில் பிரசாந்த்துக்கு என்ன மாதிரியான பொறுப்பு தரப்படுவது என்பது குறித்து ராகுல் காந்தியுடன் ஆலோசித்து சோனியா காந்தி ஓரிரு நாளில் முடிவை அறிவிப்பார். அதே சமயம் பிரசாந்த் கிஷோர் பரிந்துரைப்படி கட்சியிலும் மிகப்பெரிய மாற்றங்கள் இருக்கும். இவ்வாறு காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: