×

பதிலடியால் திணறும் ரஷ்யப்படை கிழக்கு உக்ரைனில் போர் தீவிரம்: மரியுபோலில் 2வது பிரமாண்ட குழியில் 1000 சடலங்கள்

கீவ்: கிழக்கு உக்ரைனை கைப்பற்ற ரஷ்யா, உக்ரைன் படைகள் தீவிர சண்டையிட்டு வருகின்றன. உக்ரைனின் கடுமையான பதிலடி தாக்குதலால் ரஷ்யா முன்னேறுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மீது 2 மாதமாக போர் தொடுத்து வரும் ரஷ்யா, கெர்சன் மற்றும் மரியுபோல் நகரத்தை மட்டும் இதுவரை கைப்பற்றி உள்ளதாக அறிவித்துள்ளது. மரியுபோலில் அசோவ்ஸ்டல் இரும்பு தொழிற்சாலையை கைப்பற்ற மட்டும் ரஷ்யா போராடி வருகிறது. அதே நேரத்தில், போர் 2.0 திட்டத்தை வகுத்து கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பஸை கைப்பற்ற புதிய திட்டத்துடன் தனது படைகளை ரஷ்யா குவித்து தாக்குதல் நடத்தி வருகிறது.  

ரஷ்ய படைகள் வாபஸ் பெற்ற புச்சா மற்றும் கீவ் புறநகர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான சடலங்கள் கொடூரமாக கொல்லப்பட்டு புதைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது மரியுபோலில் சுமார் 9000 பேரை கொன்று ரஷ்ய ராணுவம் புதைத்து இருப்பது செயற்கைகோள் படங்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேபோல், புதிய செயற்கைகோள் படங்கள் வெளியாகி உள்ளது. மரியுபோலுக்கு அருகிலுள்ள ஒரு நகரத்தில் சுமார் 147 அடியில்  இரண்டாவது பிரமாண்ட புதைக்குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், 1000 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மரியுபோலில் நடந்த சண்டையில் இதுவரை 21,000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில், 10,000 பேர் சடலங்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், மேலும் ஆயிரக்கணக்கான சடலங்களை ரஷ்யா ராணுவம்  புதைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.  

இந்நிலையில், கிழக்கு பகுதியில் ரஷ்யாவுக்கு உக்ரைன் படைகள் கடுமையான பதிலடி தாக்குதல்களை நடத்தி வருவதால், அவர்களுடைய திட்டத்தில் தொய்வு ஏற்பட்டு, முன்னேற முடியாமல் தவித்து வருகின்றன. டான்பாஸ் பிராந்தியத்தில் உள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளை முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர ரஷ்யா தொடர்ந்து போராடி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் உக்ரைன் படைகள் மேற்கண்ட 2 நகரங்களில் 8 ரஷ்ய தாக்குதல்களை முறியடித்து உள்ளன. ரஷ்யாவின் 9 டாங்கிகள், 18 கவசப் பிரிவுகள்  மற்றும் 13 வாகனங்கள், ஒரு டேங்கர் மற்றும் மூன்று பீரங்கி அமைப்புகளை  உக்ரைன் அழித்து உள்ளது. முக்கிய நகரங்களில் பல வாரங்களாக தெருச் சண்டை தொடர்கிறது. போபாஸ்னா, டொனெட்ஸ்க்  நகரில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 7 பேர் காயமடைந்தனர்.

உக்ரைனின் கடுமையான பதிலடியால் கடல் மற்றும் வான் பரப்பை ரஷ்யாவால் முழுமையாக கைப்பற்ற முடியவில்லை. மரியுபோலை ரஷ்யா கைப்பற்றிவிட்டதாக அறிவித்தாலும், அங்கு தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. இரும்பு தொழிற்சாலையில் சுமார் 2,000 உக்ரைன் வீரர்கள் பதுங்கு குழியில் இருந்து சண்டையிட்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியே தீப்பிழம்பாக காட்சி அளிக்கிறது. பதுங்கு குழியில் உள்ள உக்ரைன் படைகளுக்கு ஹெலிகாப்டர் மூலம் ஆயுதங்கள் சப்ளை செய்யப்படுகிறது. டான்பாஸில் பெரும் முன்னேற்றும் ஏற்படாததால், 12 முதல் 14 உயரடுக்கு ராணுவ குழுக்களை மரியுபோலில் இருந்து டான்பாசுக்கு ரஷ்யா அனுப்பி உள்ளது. இதுவரை சுமார் ஒரு லட்சம் ரஷ்ய வீரர்கள் மற்றும் சிரியா மற்றும் லிபியாவில் இருந்து சண்டையிட்ட கூலிப்படையினர் உக்ரைனில் குவிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் ரஷ்யா, தங்களது வீரர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது.

* புடினுக்கு கேன்சரா?
ரஷ்ய அதிபர் புடின் புற்றுநோயுடன் போராடுகிறார் என்று மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. ஆனால் அவை வதந்திகள் என்று மற்றொரு தரப்பு கூறுகிறது. இதற்கிடையே தனது பாதுகாப்பு அமைச்சர் ஷோய்குடன், அதிபர் புடின் பேசும்போது, அவர் அமர்ந்திருக்கும் தோரணை மற்றும் அவரது முகம் மற்றும் கழுத்து ஆகியைவ வீங்கியிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. அமைச்சர் ஷோய்குவிடம் புடின் பேசுபோதும், தனது வலது கையை மேசையின் விளிம்பை இறுகப் பிடித்துக் கொண்டு, தனது காலை கீழே அழுத்தமாக வைத்துள்ளார். இதுதொடர்பாக இங்கிலாந்து ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், ‘தன்னைப்பற்றிய கருத்துக்களை மக்கள் படிக்க வேண்டும் என்றும், தனக்கு நோய் பாதிப்பு இருப்பதாக வதந்திகள் பரவ வேண்டும் என்பதற்காக அவ்வாறு அமர்ந்துள்ளார்’ என்று தெரிவித்துள்ளன.

* ஜி-20ல் ரஷ்யாவுக்கு  சிக்கல் இல்லை
2014ல் உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமித்தபோது, ​​ஆத்திரமடைந்த உலகத் தலைவர்கள் எட்டு தொழில்மயமான நாடுகளின் குழுவிலிருந்து ரஷ்யாவை வெளியேற்றினர். அதன்பின், ஜி-7 நாடுகளாக செயல்பட்டு வருகிறது. தற்போதைய ரஷ்யாவின் படையெடுப்பால் ஜி-20 நாடுகளில் இருந்து ரஷ்யாவை வெளியேற்றுவது குறித்து வாஷங்டனில் ஆலோசனை நடந்தது. இதில், சீனா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகள், தொழில்துறை மற்றும் வளர்ந்து வரும் சந்தை நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜி-20ல் ரஷ்யாவின் உறுப்பினரை ஆதரிப்பதாக தெளிவுபடுத்தியுள்ளது. இதனால், ரஷ்யாவை வெளியேற்றுவது என்பது குறைவுதான்.

* ஐ.நா செயலாளர் உக்ரைன் பயணம்
போர் நிறுத்தம் தொடர்பாக, வரும் 26ம் தேதி ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் அதிபர் புடின் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோரை ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ கட்டரெஸ் சந்தித்து பேசுகிறார். இதேபோல், வரும் 28ம் தேதி உக்ரைன் தலைநகர் கீவ்வில் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து பேசுகிறார்.

* கொந்தளித்த ரஷ்ய மக்கள்
கடந்த 14ம் தேதி கருங்கடலில் நிறுத்தப்படிருந்த ரஷ்யாவின் மிகப்பெரிய போர் கப்பல் மோஸ்க்வா மீது உக்ரைன் ராணுவம் ஏவுகணை வீசி தாக்கியதில் தீப்பிடித்து மூழ்கியதாக கூறப்படுகிறது. ஆனால், கப்பலில் இருந்த வெடிமருந்துகள் வெடித்ததில் தீவிபத்து ஏற்பட்டு, கடலில் மூழ்கியதாக ரஷ்யா தெரிவித்திருந்தது. இதில் இருந்து அனைவரும் மீட்கப்பட்டதாக ரஷ்யா தெரிவித்திருந்தது. ஆனால், கப்பலில் பணிபுரிந்த தங்கள் மகன்கள்  வீட்டிற்கு வராதது குறித்து குடும்பத்தினர் சரமாரியாக கேள்வி எழுப்பியதால், சுமார் ஒரு வாரத்திற்கு பின் ரஷ்யா ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஒரு வீரர் பலியாகி இருப்பதாகவும், 27 பேர் மாயமாகி உள்ளதாகவும், 396 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கப்பல் மூழ்குவதற்கு முன்பு அனைவரும் மீட்கப்பட்டதாக தெரிவித்த தகவல் குறித்து ரஷ்யா எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை.

ஒன்று கூடும் தலைவர்கள்
* உக்ரைன் விவகாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து ஜெர்மனியில் 26ம் தேதி ஆலோசிக்க  நேட்டோ மற்றும் நேட்டோ அல்லாத 40 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துளார்.
* உக்ரைனில் தனது படைகளை குவித்துள்ள ரஷ்ய அதிபர் புடினுக்கு அதிக வலியை தர கூடிய வகையில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க மேற்கு நாடுகள் ஆலோசித்து வருகிறது. குறிப்பாக, எண்ணெய் மற்றும் எரிவாயு குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.

Tags : eastern Ukraine ,Mariupol , Russian troops retaliate, intensifying war in eastern Ukraine: 1000 bodies found in 2nd mass grave in Mariupol
× RELATED உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் தீவிர...