×

கொல்கத்தாவை வீழ்த்தியது குஜராத்

மும்பை: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணி 8 ரன் வித்தியாசத்தில் போராடி வென்றது. டி.ஒய்.பாட்டீல் அரங்கில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக சாஹா, கில் களமிறங்கினர். கில் 7 ரன் மட்டுமே எடுத்து சவுத்தீ வேகத்தில் விக்கெட் கீப்பர் சாம் பில்லிங்ஸ் வசம் பிடிபட்டார். அடுத்து சாஹாவுடன் கேப்டன் ஹர்திக் பாண்டியா இணைந்தார். இருவரும் 2வது விக்கெட்டுக்கு 75 ரன் சேர்த்தனர்.

சாஹா 25 ரன் (25 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து உமேஷ் வேகத்தில் வெங்கடேஷிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 3வது விக்கெட்டுக்கு ஹர்திக் - மில்லர் அதிரடி காட்ட, குஜராத் ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது. ஹர்திக் 36 பந்தில் அரை சதம் அடித்தார். மில்லர் 27 ரன் (20 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்), ஹர்திக் 67 ரன் (49 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர். ரஸ்ஸல் வீசிய கடைசி ஓவரில் அபினவ் மனோஹர் (2), பெர்குசன் (0), திவாதியா (17 ரன்), யஷ் தயால் (0) ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து அணிவகுக்க, குஜராத் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 156 ரன் குவித்தது. அந்த அணி கடைசி 17 பந்தில் 6 விக்கெட் இழந்தது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து, 157 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா களமிறங்கியது. கேகேஆர் அணி 6.1 ஓவரில் 34 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது. கடைசி கட்டத்தில் ரஸ்ஸல் - உமேஷ் இணைந்து வெற்றிக்காகப் போராடினர். ரஸ்ஸல் அரை டஜன் சிக்சர்களை தூக்க, ஆட்டம் பரபரப்பானது. அவர் 48 ரன் (25 பந்து, 1 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசி, கடைசி ஓவரின் 2வது பந்தில் ஆட்டமிழக்க, கொல்கத்தா போராட்டம் முடிவுக்கு வந்தது. அந்த அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 148 ரன் எடுத்து, 8 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.


Tags : Gujarat ,Kolkata , Gujarat defeated Kolkata
× RELATED பாஜவுக்கு வாக்களிக்க மக்களுக்கு...