×

மத அமைதியை சீர்குலைக்கும் பேச்சு இந்து மகா சபா மாநில தலைவர் கைது: மருத்துவமனையில் அனுமதி

புதுக்கடை: மத அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசிய இந்து மகா சபா மாநில தலைவர், தா.பாலசுப்பிரமணியன் நாகர்கோவிலில் நேற்று கைது செய்யப்பட்டார். குமரி மாவட்டம் புதுக்கடை அருகே முள்ளுவிளை பகுதியில் கடந்த இரு நாட்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய, இந்து மகா சபா மாநில தலைவர் தா.பாலசுப்பிரமணியன் பிற மதத்தை சேர்ந்தவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் பேசியதாகவும், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி மத அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இருப்பதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புதுக்கடை சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ்மோகன் புகார் அளித்திருந்தார். இதன் பேரில் புதுக்கடை போலீசார் விசாரணை நடத்த எஸ்.பி. உத்தரவிட்டார்.

இதையடுத்து புதுக்கடை போலீசார்  வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை, நாகர்கோவில் அடுத்த ஈத்தாமொழி தோப்பன்குடியிருப்பில் உள்ள வீட்டில் இருந்து தா.பாலசுப்பிரமணியனை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். பின்னர் அவரை கைது செய்தனர். மருத்துவ பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அப்போது அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மருத்துவமனைக்குள் செல்ல முயன்றனர். இதையடுத்து போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டனர்.

மருத்துவ பரிசோதனைக்கு பின், குழித்துறை ஜுடீசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தா. பாலசுப்பிரமணியன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது சார்பில், உடல்நிலை சரியில்லை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி நேற்று மதியம் கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தா. பாலசுப்பிரமணியன் அனுமதிக்கப்பட்டார். அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Hindu Maha Sabha , Hindu Maha Sabha state leader arrested for disrupting religious peace
× RELATED பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் அகில...