கொரோனா சோதனை செய்யப்பட்டவர்களில் சென்னை ஐஐடியில் 55 பேருக்கு தொற்று உறுதி: சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: சென்னை ஐஐடியில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் தெரிவித்தார். சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில், மாநில தடுப்பூசி மருந்துகள் சேமிப்பு கிடங்கை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். பின்னர், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் பேசியதாவது: பொது இடங்களில் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும். சென்னை ஐஐடியில் 1,420 பேரை மருத்துவ பரிசோதனை செய்ததில் முதலில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது வந்த கொரோனா முடிவுகளின்படி மேலும் 25 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 55 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, சிறிய அளவில் தொண்டை எரிச்சல் இருப்பதாக கூறுகிறார்கள். தற்போதுவரை தொற்று பாதிப்பு விகிதம் குறைவாக தான் உள்ளது.

தமிழகத்தில் இதுவரை எக்ஸ்இ மரபணு கண்டறியப்படவில்லை. அவசர சிகிச்சை பிரிவில் 2 பேர் மட்டுமே கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் 2ம் தவணை தடுப்பூசி 1.46 கோடி பேர் செலுத்தவில்லை. மக்கள் கூடும் இடங்கள், பள்ளிகள் கல்லூரிகளில் கவனமாக இருக்கவேண்டும். கொரோனா நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். மார்ச் 2020ல் இருந்த கட்டுப்பாடுகள் முடிந்தவரை மீண்டும் கொண்டு வர வேண்டாம் என நினைக்கிறோம். தயவு செய்து மக்கள் தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும்.

ஓமிக்ரான் பரவலில் பாதிப்பு குறைவாக இருப்பதற்கு காரணம் தடுப்பு ஊசி செலுத்தியதுதான். தொற்று பூஜ்யம் என்றால் சாதனை அல்ல, இறப்பு பூஜ்யம் என்பது தான் வெற்றி. ஐஐடியில் யாருக்கும் மருத்துவ தேவை இல்லை ஏற்படவில்லை. தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது. மேலும் பரவாமல் தடுப்பது மக்களின் கையில்தான் உள்ளது. முதல் மூன்று அலைகளை வெற்றி கொண்டது போல தடுப்பூசி, முகக்கவசம் அணிந்து தொற்று பரவாமல் தடுக்க வேண்டும். அதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்.இவ்வாறு பேசினார்.

Related Stories: