உலக பாரம்பரிய நீர்ப்பாசன கட்டமைப்பு 3 சர்வதேச விருதுகளுக்கு தமிழ்நாடு தேர்வு

சென்னை: சர்வதேச அமைப்பின் சார்பில் வழங்கப்படும் உலக பாரம்பரிய நீர்ப்பாசனக் கட்டமைப்பு விருதுகளுக்கு தமிழ்நாடு 3 விருதுகளுக்கு தேர்வாகியுள்ளது. இதுகுறித்து நீர்வளத்துறை செயலாளர் வெளியிட்ட அறிக்கை: சர்வதேச நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் ஆணையம், ஒவ்வொரு ஆண்டும், உலக பாரம்பரிய நீர்ப்பாசனக் கட்டமைப்புகள் மற்றும் நீர் சேமிப்பு விருதுகள் போன்ற விருதுகளை அறிவிக்கிறது. இந்திய தேசிய நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் குழுமம் ஒவ்வொரு ஆண்டும் இந்தியா மாநிலங்களில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் தகுதியான முன்மொழிவுகளை அமைப்பிற்குப் பரிந்துரைக்கிறது.

இதன்படி கடந்த ஆண்டு ஜுலை தமிழ்நாடு நீர்வளத்துறை சார்பில் கல்லணை, காளிங்கராயன் அணைக்கட்டு, வீராணம் நீர்த்தேக்கம், பேச்சிப்பாறை அணை, மதுராந்தகம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி ஆகிய 6 நீர்த்தேக்கக் கட்டமைப்புகளை உலக பாரம்பரிய நீர்ப்பாசனக் கட்டமைப்புகளாக அறிவிக்கக் கோரி அனைத்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் சர்வதேச நீர்ப்பாசன மற்றும் வடிகால் ஆணையத்திலிருந்து ஆய்வுக்குழு தமிழ்நாடு நீர்வளத்துறை விண்ணப்பித்த கட்டமைப்புகளை நேரில் ஆய்வு செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக, உலக பாரம்பரிய நீர்ப்பாசன கட்டமைப்புகளுக்கான விருதுகளுக்கு கல்லணை, வீராணம் ஏரி மற்றும் காளிங்கராயன் அணைக்கட்டு ஆகிய 3 கட்டமைப்புகள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாட்டிற்கும் 4 விருதுகள் சர்வதேச அமைப்பால் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. 2021ம் ஆண்டிற்கு இந்தியாவிற்கு 4 விருதுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு 3 விருதுகள் பெறுகிறது என்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும். மேலும், 2022ம் ஆண்டிற்கான விருதுக்கு தமிழ்நாட்டின் சார்பில் மேலும் பத்துக்கும் மேற்பட்ட பாரம்பரிய நீர்ப்பாசனக் கட்டமைப்புகளுக்கான உரிய ஆவணங்களுடன் முன்மொழிவு அனுப்பப்படவுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: