புகார் அளிக்க வரும் தாய்மார்களின் வசதிக்காக சென்னையில் 8 இடங்களில் பாலூட்டும் அறை: போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்

சென்னை: புகார் அளிக்க வரும் பாலூட்டும் தாய்மார்களின் வசதிக்காக முதல்கட்டமாக சென்னையில் போலீஸ் கமிஷனர் அலுவலகம் உள்பட 8 இடங்களில் பாலூட்டும் அறையை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று துவக்கி வைத்தார். பாலூட்டும் தாய்மார்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது, அவர்களின் குழந்தைகளுக்கு பாலூட்ட இடம் இல்லாமல் அவதிப்படுவதை போக்கும் வகையில் சென்னை காவல்துறை மற்றும் ஜஸ்டீஸ் மிஷன் இணைந்து தாய்மார்கள் பாலூட்டும் அறையை நிறுவ திட்டமிட்டன.

அதன்படி முதற்கட்டமாக காவல் ஆணையர் அலுவலகம், ஆயிரம்விளக்கு காவல் நிலையம், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, வடபழனி முருகன் கோயில், பெசன்ட் நகர் மாதா ஆலயம் உள்பட 8 இடங்களில் தாய்மார்கள் பாலூட்டும் அறையை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று காவல் ஆணையர் அலுவலகத்தில் நடந்தது. சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் ஜஸ்டிஸ் மிஷன் தொண்டு நிறுவன நிர்வாகி சினேகா ஆகியோர் பாலூட்டும் அறையை துவக்கி வைத்தனர். பின்னர், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க கைக்குழந்தையுடன் பாலூட்டும் தாய்மார்கள் பெருமளவில் வருகின்றனர். அவர்களின் பாதுகாப்புக்காக முதற்கட்டமாக 8 இடங்களில் தாய்மார்கள் பாலூட்டும் அறையை துவக்கி வைத்திருக்கிறோம்.  வரவேற்பை பொறுத்து மேலும் சில இடங்களில் நிறுவ இருக்கிறோம்’’ என்றார்.

Related Stories: