×

24ம்தேதி நேரில் சந்திக்க முடியுமா? அண்ணாமலையிடம் விசிக நிர்வாகி பேசிய வீடியோ வைரல்: இணையதளத்தில் பாஜ- விசிக வார்த்தை மோதல்

சென்னை: வரும் 24ம் தேதி உங்களை நேரில் சந்திக்க முடியுமா என்று விசிக பிரமுகர் ஒருவர் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலைக்கு போன் செய்து பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, சமீபத்தில் ‘அம்பேத்கரும் மோடியும்’ என்ற புத்தகத்தின் முன்னுரையில், ‘அம்பேத்கர் நிச்சயமாக பிரதமர் மோடியின் ஆட்சியைப் பற்றி பெருமைப்படுவார். அம்பேத்கருக்கும், மோடிக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இருவரும் வறுமையையும் அடக்குமுறையையும் அனுபவித்தவர்கள். ஆகவே, இந்த புத்தகம் சில விஷயங்களை முன்னிலைப்படுத்துவதால் இதனை இளைய தலைமுறைக்கு பரிந்துரைக்கிறேன்’ என்று கூறியிருந்தார்.
இளையராஜாவின் இந்த கருத்து, தமிழகத்தில் பல தரப்பினரின் மத்தியில் எதிர்ப்புகளை பெற்றது. அவரின் இக்கருத்துக்கு திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்தனர். சமூக வலைதளங்களிலும் அவருக்கு எதிராக பல்வேறு கருத்துகள் வெளியாகின.

ஒருவரை பாராட்டுவதும், புகழ்வதும் அவரவர் தனிப்பட்ட உரிமை என்றாலும், அம்பேத்கருடன் எப்படி மோடியை ஒப்பிடலாம் என்ற பொதுப்படையான கேள்வியை பெரும்பாலானோர் இளையராஜாவிடம் எழுப்பி வருகிறார்கள். ஆனால், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மட்டும், ‘சமூகத்தில் யார் மக்களோடு நெருக்கமாக இருக்கிறார்களோ, அவர்களை சந்திப்பது தான் ஆர்எஸ்எஸ்கார்களின் நோக்கம். அவர்கள் அப்படி இளையராஜாவை சுற்றிவளைத்து இருக்கக்கூடும். இளையராஜா போன்றவர்களை குறி வைப்பதே ஆர்எஸ்எஸ்சின் முக்கிய நோக்கம். இளையராஜா பாவம்’ என்று மிக நீண்ட விளக்கத்தை செய்தியாளர்களை சந்திக்கும்போதெல்லாம் சொல்லி வருகிறார்.

இது பாஜவினர் மத்தியில் டென்ஷனை உருவாக்கி வருகிறது. இதற்கு பதிலளித்த தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, ‘இளையராஜா மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டதில் என்ன தவறு இருக்கிறது. ஆர்எஸ்எஸ் குறித்து அம்பேத்கர் கூறிய கருத்து தொடர்பாக என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க திருமாவளவன் தயாராக இருக்கிறாரா. நான் இதுவரை 2000 புத்தகங்கள் படித்துள்ளேன். அருந்ததியர் சமூகத்தில் மிகப்பெரும் தலைவரான வி.பி.துரைசாமி அம்பேத்கர் கொள்கையை பாஜ பின்பற்றுவதால்தான் பாஜவில் இணைந்தார்’ என்று சவால் விட்டிருந்தார்.

இந்த சவாலுக்கு திருமாவளவன் உடனடியாக பதிலடி தந்திருந்தார். ‘‘மோடியின் அக்கறை எல்லாம் அதானி, அம்பானி மீது மட்டுமே. அவர் வறுமை ஒழிப்புக்கு என்ன செய்திருக்கிறார். அதனால் அவரை விமர்சிப்பதில் என்ன தவறு. விளையாட்டில் பல்வேறு படிநிலை உண்டு. ஜூனியர், சப் ஜூனியர் என்று அழைப்பார்கள். அதுபோல் அரசியலில் அண்ணாமலை ஒரு சப் ஜூனியர். அவருடன் விவாதிக்க விடுதலை சிறுத்தை கட்சியிலிருந்து ஒரு சப்-ஜூனியரை வேண்டுமென்றால் அனுப்பி வைக்கிறோம்’’ என்று கூறினார்.

இது பாஜக- விசிக மத்தியில் இணையதளத்தில் வார்த்தை போரை உருவாக்கியது. இரு கட்சிகளில் உள்ள முக்கிய நிர்வாகிகள் இணையதளங்களில் இது தொடர்பாக கடும் வார்த்தை மோதலில் ஈடுபட்டுள்ளனர். இந்ந விவகாரம் இப்படி புகைந்து கொண்டிருக்கும் போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகி சங்கத்தமிழன், அண்ணாமலைக்கு போனை போட்டு நேரடியாகவே பேசிவிட்டார். அவர் போனில் பேசிய வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

அதில் பேசிய சங்கத்தமிழன், ‘‘வரும் 24ம் தேதி உங்களை நேரில் சந்திக்க முடியுமா. நேரில் விவாதம் செய்ய வேண்டும். அதற்குள் அம்பேத்கரின் தொகுப்பு நம்பர் 8 என்ற புத்தகத்தை படித்து வைத்திருங்கள்’’ என்று கூறுகிறார்.அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, ‘‘நான் ஏற்கெனவே அம்பேத்கரின் புத்தகத்தை படித்திருக்கிறேன். 24ம் தேதி பிஸியாக இருக்கிறேன். 26ம் தேதி நேரில் சந்திக்கலாம்’’ என்று சொல்கிறார். இந்த வீடியோ தான் தற்போது அரசியல் களத்தில் பரபரப்பாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதனால் 26ம்தேதி இரு கட்சி நிர்வாகிகளும் நாள் குறித்திருப்பதால் அன்றைய தினம் நேரடி விவாதம் நடக்குமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சியினர் மத்தியில் கடும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Vizika ,Annamalai ,BJP , Can I meet you in person on the 24th? Video viral of Vizika executive talking to Annamalai: BJP-Vizika word clash on website
× RELATED உயிரே போனாலும் நீட் ரத்து செய்ய மாட்டோம்: அண்ணாமலை திமிர்