×

தீவிரவாதிகளின் பயங்கர சதி முறியடிக்கப்பட்ட நிலையில் பிரதமர் மோடி இன்று ஜம்மு பயணம்: பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு

ஜம்மு: தேசிய பஞ்சாயத்து ராஜ் தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று ஜம்மு காஷ்மீர் செல்கிறார். தீவிரவாதிகளின் பயங்கர சதி திட்டம் முறியடிக்கப்பட்ட நிலையில், பிரதமர் மோடி அங்கு செல்வதால் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இன்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள பாலி கிராமத்தில் இன்று நடக்கும் பஞ்சாயத்து ராஜ் கொண்டாட்ட நிகழ்ச்சியில் மோடி உரையாற்றுகிறார். இதில், 30 ஆயிரம் பஞ்சாயத்து உறுப்பினர்கள் உள்பட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். இதை தொடர்ந்து கிஷ்துவார் மாவட்டத்தில் செனாப் ஆற்றின் குறுக்கே ரட்லே மற்றும் குவார் நீர்மின் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

சம்பா மாவட்டம் சஞ்வான் பகுதியில் நேற்று முன்தினம் ஒன்றிய தொழில் பாதுகாப்பு படையின்(சிஆர்பிஎப்) முகாம் மீது தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டது. தொழில் பாதுகாப்பு படையின் முகாமில் இருந்து புறப்பட்டு சென்ற பேருந்தின் மீது தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசினர். இதில் தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த உதவி சப் இன்ஸ்பெக்டர் படேல் வீரமரணம் அடைந்தார். எனினும் தாக்குதலில் ஈடுபட்ட 2 ஜெய்ஸ் இ முகமது தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். பிரதமரின் வருகைக்கு 2 நாளுக்கு முன் நடந்த இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த 2019ல் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு சட்ட பிரிவு 370 ஐ ரத்து செய்யப்பட்ட பின் பிரதமரின் வருகையையொட்டி அங்கு  பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பிஎஸ்எப், சிஆர்பிஎப் போன்ற துணை ராணுவ படையினர் மற்றும் ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். உள்ளூர் போலீசாருடன், துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீவிர வாகன சோதனைகளும் நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘எந்தவித அசம்பாவிதங்களும் நிகழாமல் தடுக்க ஜம்முவில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கூட்டத்தை கண்காணிக்க நவீன பாதுகாப்பு கருவிகளும் போலீசாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகள், கோதுமை அறுவடை இயந்திரங்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் ஜம்மு- பதான்கோட் சாலையில் செல்வதற்கு இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.

ரூ.20,000 கோடி திட்டத்திற்கு அடிக்கல்
* இன்று ஜம்மு காஷ்மீரில் ரூ.20 ஆயிரம் கோடியிலான திட்டத்துக்கு  பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
* ரூ.3,100 கோடியில் பனிஹால்- காஸிகுந்த் இடையே அமைக்கப்பட்டுள்ள சுரங்க சாலையை திறந்து வைக்கிறார்.
* டெல்லி-அமிர்தசரஸ் மற்றும் கத்ரா நகரங்கள் இடையயோன ரூ.7,500 கோடியில் அமைக்கப்படவிருக்கும் விரைவு நெடுஞ்சாலைக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

Tags : PM Modi ,Jammu , PM Modi to visit Jammu today
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...