கட்சியை வலுப்படுத்த தீவிர நடவடிக்கை; காங்கிரஸ் தலைமையில் மிகப்பெரிய மாற்றம்?.. பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைக்கு மூத்த தலைவர்கள் ஆதரவு

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துதல் தொடர்பாக பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைகளுக்கு மூத்த தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால், கட்சியின் தலைமையில் மிகப் பெரிய மாற்றம் இருக்கும் என்றும், அதனை விரைவில் சோனியா அறிவிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் தோல்வி மற்றும் அடுத்தடுத்து நடந்த சட்டப் பேரவை தேர்தல் தோல்வியால் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சோனியா, ராகுல் காந்தி ஆகியோர் விலகி இருக்க வேண்டும் என்று மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தலைமையிலான 23 தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.

இதையடுத்து, காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவது தொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்கும் சிந்தனை கூட்டம் ராஜஸ்தானில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அப்போது கட்சிக்குள் புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. இதற்கிடையே காங்கிரஸ் உள்கட்சி தேர்தலை, செப்டம்பர் மாதத்திற்குள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றிபெற செய்வது தொடர்பாக, புதிய வியூகங்களுடன் சோனியாவை அணுகி உள்ளார். சோனியாவுடன் அவர் 3 நாட்கள் தொடர் ஆலோசனை நடத்தினார்.

அந்த ஆலோசனை கூட்டத்தில், பல்வேறு குறைபாடுகளையும், அதற்கான மாற்றுத்திட்டங்கள் குறித்தும் விவரித்தார். குறிப்பாக 11 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டியதின் அவசியத்தை சுட்டிக் காட்டினார். தொடர்ந்து கட்சியில் மாற்றங்கள் கொண்டு வருவது, வாரிசு அரசியலை தடுக்க, ஒரு குடும்பத்தில் இருந்து ஒருவர் மட்டுமே காங்கிரஸ் தலைவராக இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவரது பரிந்துரைகள் உண்மையில் காங்கிரஸ் கட்சிக்கு பயன் அளிக்குமா? என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அடங்கிய குழுவை சோனியாகாந்தி நியமித்திருந்தார்.

அந்த குழுவில், பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், ரந்தீப் சுர்ஜேவாலா, ப.சிதம்பரம், அம்பிகா சோனி, ஜெய்ராம் ரமேஷ் மற்றும் முகுல் வாஸ்னிக் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்த குழு பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைகள் குறித்த விரிவான அறிக்கை மற்றும் தங்களது கருத்தை சோனியா காந்தியிடம் நேற்று சமர்ப்பித்துள்ளது. அதில், பெரும்பாலான தலைவர்கள் பிரசாந்த் கிஷோரை கட்சியில் இணைப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் பரிந்துரைத்த திட்டங்களுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம் பிரசாந்த் கிஷோரின் பரிந்துரைகள் குறித்து கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ராஜஸ்தான் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட், பிரசாந்த் கிஷோரை வெளிப்படையாக பாராட்டி உள்ளார். அதேபோல் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி, பிரசாந்த் கிஷோரை கட்சியில் இணைவதை எதிர்ப்பவர்கள் சீர்திருத்த எதிர்ப்பாளர்கள் என்று விமர்சித்துள்ளார்.

எனவே, பிரசாந்த் கிஷோர் முறையாக கட்சியில் இணைந்தால், அது காங்கிரசுக்கு பயனளிக்கலாம் என்றும், அவர் சில மாநில கட்சிகளின் தலைவர்களுடன் நல்ல நட்பில் இருப்பதாகவும், அதனால் மாநில அளவில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. எனவே, விரைவில் காங்கிரஸ் தலைமையில் மிகப்பெரிய மாற்றத்தை அமல்படுத்த சோனியா காந்தி முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: