×

கேரள முதல்வர் வீடு அருகே வெடிகுண்டு வீச்சு: கண்ணூரில் பரபரப்பு; போலீஸ் குவிப்பு

திருவனந்தபுரம்: கண்ணூரில் கேரள முதல்வர் பினராயி விஜயன் வீட்டுக்கு அருகே வெடி குண்டு வீசப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பினராயி விஜயனின்  வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி 21ம் தேதி, கண்ணூர் அருகே உள்ள தலச்சேரி பகுதியை சேர்ந்த ஹரிதாஸ் என்ற சிபிஎம் தொண்டர் 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். இதுகுறித்து தலச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்தக் கொலையில் முக்கிய நபரான ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த நிகில் தாஸ் (38) பினராயி பகுதியிலுள்ள ஒரு வீட்டில் தலைமறைவாக இருப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசாரின் தீவிர விசாரணையில் முதல்வர் பினராயி விஜயனின் வீட்டுக்கு மிக அருகே உள்ள ஒரு வீட்டில் நிகில் தாஸ் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நிகில் தாஸ் அந்த வீட்டில் தலைமறைவாக இருந்தது தெரியவந்தது. முதல்வர் பினராயி விஜயனின் வீடு இருக்கும் அந்த பகுதியில் 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். இந்த பலத்த பாதுகாப்பையும் மீறி சிபிஎம் தொண்டர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் எப்படி தங்கியிருந்தார் என்பது போலீசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்றிரவு நிகில் தாஸ் தங்கியிருந்த வீட்டில் ஒரு கும்பல் சரமாரியாக வெடிகுண்டுகள் வீசியது. இதில் வீடு முழுவதும் சேதமடைந்தது. முதல்வர் பினராயி விஜயனின் வீட்டுக்கு அருகே நடந்த இந்த வெடிகுண்டு வீச்சு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பினராயி விஜயனின் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.  இந்த வெடிகுண்டு வீச்சு சம்பவத்திற்கு சிபிஎம் தான் காரணம் என்று ஆர்எஸ்எஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதற்கிடையே நிகில் தாஸ் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரான ரேஷ்மா என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.



Tags : Kerala ,Kannur , Bomb blast near Kerala CM's house: riots in Kannur; Police concentration
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...