அடுத்தாண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ராஜஸ்தானில் காங். தலைமையில் மாற்றம்?

டெல்லி: சோனியா காந்தியை அசோக் கெலாட்டும், சச்சின் பைலட்டும் சந்தித்ததால், ராஜஸ்தானில் ஆட்சி மற்றும் கட்சியளவில் தலைமை மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜஸ்தான் முதல்வருமான அசோக் கெலாட், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை புதன்கிழமை டெல்லியில் சந்தித்தார். அதன்பின் ஒரு நாள் கழித்து, நேற்று முன்தினம் சோனியா காந்தியை இளம் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட் சந்தித்தார்.

இரு தலைவர்களும் அடுத்தடுத்த நாட்களில் சோனியா காந்தியை சந்தித்ததால், ராஜஸ்தான் காங்கிரசில் தலைமை மாற்றம் ஏற்படும் என்றும், அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றன. முன்னதாக சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், காங்கிரஸ் தலைவர்  சோனியா காந்தியை சந்தித்தார். அப்போது தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த்  கிஷோர், அசோக் கெலாட்டும் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகையில், ‘ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், முதல்வருக்கும், சச்சின் பைலட்டுக்கும் அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருகிறது.

அடுத்தாண்டு சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால், கட்சி மற்றும் ஆட்சியில் சில மாற்றங்களை செய்ய தலைமை முடிவு செய்துள்ளது. அதனால், இரு தலைவர்களையும் சோனியா காந்தி சந்தித்தார்’ என்றனர். இதற்கிடையே ராஜஸ்தானில் தலைமை  மாற்றம் குறித்து சச்சின் பைலட்டிடம் கேட்டபோது, ‘ராஜஸ்தானில் காங்கிரஸ் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி ஆலோசனை நடத்தினோம். இறுதி முடிவை கட்சியின் தலைவர்  சோனியா காந்தி எடுப்பார். எங்களைப் போன்ற தலைவர்கள் உடனடியாக எந்த பதிலையும் தெரிவிக்கக் கூடாது’ என்றார்.

Related Stories: