நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி வேண்டும்: சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: உச்சநீதிமன்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியும்  கருத்தில்கொள்ள வேண்டும். தமிழ்மொழி உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக  ஆக்கப்பட வேண்டும். உச்சநீதிமன்றத்தின் ஒரு கிளையை சென்னையில் அமைக்க  வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி முன்னிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் நிர்வாகபிரிவு கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, நாமக்கல், விழுப்புரம் சங்கராபுரம் நீதிமன்றம் கட்டிட திறப்பு விழா மற்றும் கொரோனாவால் பலியான வழக்கறிஞர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.7 லட்சம் நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று நடந்தது.

நிகழ்ச்சியில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியம், எம்.எம்.சுந்தரேஷ், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, உயர் நீதிமன்ற நீதிபதிகள், அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், தமிழ்நாடு பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், அகில இந்திய பார்கவுன்சில் துணை தலைவர் எஸ்.பிரபாகரன், வக்கீல் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், மெட்ராஸ் பார் அசோசியேசன், பெண் வழக்கறிஞர்கள் சங்கம், லா அசோசியேசன் ஆகியவற்றின் பிரதிநிதிகள், மூத்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

நிகழச்சியில், தமிழகத்தில் கொரானா தொற்றில் உயிரிழந்த வழக்கறிஞர்களுக்கு சேம நல நிதியில் இருந்து தலா 7 லட்சம் ரூபாய் நிதியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதைத் தொடர்ந்து சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் தமிழகத்தில் முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ள வணிக நீதிமன்றத்தை முதல்வர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, சென்னை உயர்நீதிமன்றத்தின் நிர்வாக கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், நாமக்கல் மாவட்டம் பரமத்தி மற்றும் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம், நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் ஆகியவற்றையும் உச்ச்நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா திறந்து வைத்தார்.

முன்னதாக உயர் நீதிமன்ற அறைகளை பார்வையிட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, தமிழக தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றனர். விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவுபெறக்கூடிய நிலையில் அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவருக்கு இன்று ஓராண்டு முடிகிறது. எனக்கு அடுத்த மாதம் 7ம் தேதி ஓராண்டு முடிவடைய இருக்கிறது. தமிழ்நாட்டில் எனது தலைமையில் அரசு பொறுப்பேற்ற பிறகு உயர்நீதிமன்றத்தில் நான் பங்குபெறக்கூடிய முதல் விழா இது.

அப்படிப்பட்ட இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் பெருமைபடுகிறேன். சட்டத்தின் ஆட்சியை, சமூகநீதி ஆட்சியை, நீதிநெறிமுறைகளை முறையாக பின்பற்றும் ஆட்சியை வழங்க வேண்டும் என்ற உறுதியோடு தமிழ்நாட்டில் நல்லாட்சியை வழங்கி கொண்டிருக்கிறோம். உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் தமிழ்நாட்டிற்கு வந்திருப்பது பெருமைக்குரிய வகையில் அமைந்துள்ளது. சட்டத்தின் குரலாக மட்டும் இல்லாமல் மக்களின் குரலாகவும் ஒலிக்கக்கூடியவராக நமது உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். ஆந்திர மாநிலம் பொன்னாவரம் என்ற கிராமத்தில் ஒரு எளிய விவசாய குடும்பத்தில் பிறந்து இன்று இந்தியாவின் உச்சநீதிமன்ற தலைமை நீதியரசராக உயர்ந்து நிற்கிறார்.

ஜனநாயகத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட நீதியரசான இவர் நாட்டு மக்களின் நம்பிக்கை பெற்றவராக திகழ்ந்துகொண்டிருக்கிறார். நாடாளுமன்றம், சட்டமன்றம், நீதிமன்றம் ஆகிய மூன்றும் மக்கள் மன்றத்தின் விருப்பங்களை பிரதிபலிப்பவையாக செயல்பட வேண்டும். நமது தலைமை நீதியரசர் அப்படிதான் செயல்பட்டு வருகிறார் என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளை என்னால் கூற முடியும். அனைத்து சட்டங்களும் நீதிமுறை சார்ந்த லட்சியங்களால் உறுதிசெய்யப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கக்கூடிய நீதியரசர் இந்த விழாவிற்கு வந்தது நமக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்துக்கொண்டிருக்கிறது.

இதேபோல், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசரும் நீதித்துறைக்கு சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். தமிழ்நாட்டில் இருந்து உச்சநீதிமன்றத்திற்கு சென்று அங்கு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்க கூடியவர்களாக நீதியரசர் ராமசுப்பிரமணியம், எம்.எம்.சுந்தரேசும் செயல்பட்டு வருகிறார்கள். நாகரீக சமுதாய முன்னேற்றத்திற்கும் மக்களின் வளர்ச்சிக்கும் அவர்களது உரிமை பாதுகாக்கப்பட்டு செழித்தோங்க சுந்திரமாக செயல்படும் நீதித்துறை தேவை என்பதை அரசியல் அமைப்பு உறுதி செய்கிறது. அதன்படி தமிழ்நாடு அரசும் செயல்பட்டு வருகிறது. 64 நீதிபதிகள் நியமிக்கபப்ட்டு அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை, திருவாரூரில் புதிய சார்பு நீதிமன்றஙள் அமைக்க ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது. அருப்புக்கோட்டையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது. காரைக்குடியில் சட்டக்கல்லூரி தொடங் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர்களின் கோரிக்கையான தமிழ்நாடு வழக்கறிஞர்கள் நல நிதி மூலம் வழக்கறிஞர் குடும்பங்ளுக்கு வழங்கப்படும் சேமநல நிதியானது ரூ.7 லட்சத்தில் இருந்து 10 லட்சமாக உயர்த்தி வழஙப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். அதோடு, கொரோனாவால் உயிரிழந்த 450 வழக்கறிஞர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.20 கோடியை மாநில அரசு விரைவில் வழங்கும். நீதித்துறைக்கு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

உச்சநீதிமன்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியும் கருத்தில்கொள்ள வேண்டும். தமிழ்மொழி உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக ஆக்கப்பட வேண்டும். உச்சநீதிமன்றத்தின் ஒரு கிளையை சென்னையில் அமைக்க வேண்டும். இந்த மூன்று கோரிக்கையை அனைவரின் சார்பாக வைத்திருக்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

ஒருங்கிணைந்த 116 நீதிமன்றங்கள்

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி பேசியதாவது: உயர் நீதிமன்றம் அருகே 9 மாடி கட்டிடத்திற்கு 4.2 ஏக்கர் நிலம் தமிழக அரசிடம் கோரியுள்ளோம். தருவதாக தெரிவித்துள்ளார்களார்கள். இதில் ஒருங்கிணைந்த 116 நீதிமன்றங்கள் கட்ட திட்டமிட்டுள்ளோம். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளிப்பார் என எதிர்பார்க்கிறோம். எழும்பூரில் அமைக்கப்பட்டுள்ள வணிக நீதிமன்றம் வணிக ரீதியான வழக்குகளை தீர்த்து வைக்கும் என்றார்.

Related Stories: