சுய ஒழுக்கம் இருந்தால் தான் வாழ்க்கையில் உயரமான இடத்துக்கு வர முடியும்-வடகாடு சட்ட விழிப்புணர்வு முகாமில் நீதிபதி பேச்சு

ஆலங்குடி : சுய ஒழுக்கம் இருந்தால்தான் வாழ்க்கையில் உயரமான இடத்துக்கு வரமுடியும் என ஆலங்குடி உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மு.நல்லகண்ணன் தெரிவித்தார்.புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆலங்குடி நீதிமன்றத்தின் வட்டசட்ட பணிகள் குழு சார்பில் நேற்று நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு முகாமில் அவர் பேசியதாவது:

சட்டத்தை அனைவரும் தெரிந்திருக்க வேண்டும். ஒரு தவறை செய்த பிறகு, சட்டம் தெரியாது என்று கூறி யாரும் தப்பிக்க முடியாது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர் 18 வயதுக்கு உட்பட்டவராக இருந்தாலும், அவரை சிறுவராக கருதத் தேவையில்லை என்று சட்டம் கூறுகிறது. ஒருமுறை சிறைக்கு சென்றால் மொத்த வாழ்க்கையும் சீரழிந்துவிடும்.

பள்ளி, மருத்துவமனை, அரசு அலுவலகம், சாலை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் புகை பிடித்தல் கூடாது. மீறுவது தண்டனைக்கு உரிய குற்றமாகும். அதிகமான மதிப்பெண் எடுத்தவர்களெல்லாம் வாழ்க்கையில் உயர்ந்து விட முடியாது. அதேசமயம், குறைவான மதிப்பெண் எடுத்தோரும் கெட்டு விட முடியாது. சுய ஒழுக்கம் இருந்தால்தான் வாழ்க்கையில் உயரமான இடத்துக்கு வரமுடியும். வெற்றியை உறுதி செய்யும் இடம் சுய ஒழுக்கம் மட்டுமே.

சிறுமியை திருமணம் செய்வது தண்டனைக்கு உரிய குற்றம். அவ்வாறு சிறுமியை திருமணம் செய்வோருக்கு மட்டுமல்ல, அந்த திருமணத்தை நடத்திய வைத்தவர்கள், திருமணத்துக்கு உதவியாக இருந்தவர்களுக்கும் தண்டனை கிடைக்கும். திருமணத்துக்கு மாலை வாங்கிக்கொடுத்தவரும் குற்றவாளியாகவே கருதப்படுவர். சிறுமியின் திருமணத்தில் பங்கேற்பாளர்களுக்கும் தண்டனை கிடைக்கும்.

ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டால்கூட அரசு வேலையை கனவிலும் நினைத்துபார்க்க முடியாது. சட்டத்தை தெரிந்துகொண்டு, அதை மதித்து நடந்துகொள்ள பழகிக்கொள்ள வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு மோட்டார் சைக்கிள் ஓட்ட அனுமதி இல்லை. எனவே, மாணவர்கள் சைக்கிள் ஓட்ட பழகுங்கள். அது எதிர்கால இந்தியாவுக்கு மட்டுமல்ல, உங்கள் உடல் நலனுக்கும் நல்லது. போக்குவரத்துக்கு பொது பேருந்துகளை பயன்படுத்த பழகுங்கள். சுற்றுசூழலுக்கும் கேடு விளைவிக்காது. சூழல் சீர்கெட்டால் இந்த பூமியில் எந்த ஜீவராசிகளும் வாழமுடியாது.

ஸ்மார்ட் போன் என்பது பேசுவதற்காக மட்டுமல்ல. இதுஒரு கண்காணிப்பு கருவி மாதிரி. நாம் எங்கு செல்கிறோம், என்ன பேசுகிறோம் என்பதை பதிவு செய்து, கண்காணிக்கிறது. செல்போனில் நல்லதும் உண்டு. கெட்டதும் உண்டு. எனவே, பள்ளி மாணவர்களுக்கு செல்போன் தேவையற்றது. தேவையான தகவல்களை பிறரிடம் கேட்டு பெற பழகுங்கள். தற்போதைய காலகட்டத்தில் ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை அவரைப் பற்றி பிறரிடம் விசாரிக்கத் தேவையில்லை. அவர் பயன்படுத்தும் செல்போனை ஆராய்ந்தால தெரிந்துகொள்ளலாம்.

செல்போனில் தவறான தகவல்களை பார்வர்டு செய்வதும் தண்டனைக்கு உரிய குற்றம்.

அதுமட்டுமல்ல, செல்போனிலோ, பென்ட்ரைவ் போன்றவற்றிலோ பதிவு செய்து வைத்திருந்தாலும் தவறானதாகும். அடுத்தவர் விவகாரங்களில் தேவையின்றி மூக்கை நுழைக்காதீர்கள். பிறரின் அந்தரங்கங்களை பரப்பக்கூடாது. மாணவர் பருவம் தடுமாற்றமானது. எனவே, செல்போன் பயன்படுத்துவதை தவிருங்கள். போதைப்பொருள் பயன்படுத்துவது ஒரு வழிப்பாதையில் பயணிப்பதைப் போன்றது. அதன் வழியே சென்றவர்கள் யாரும் திரும்பியதில்லை. எனவே, அதைப் பயன்படுத்தாதீர்கள் என்றார்.

நிகழ்ச்சியில், அரசு உதவி வழக்கறிஞர் வெங்கடேசன், வழக்கறிஞர் சங்கத் தலைவர் ராஜா, பள்ளியின் செயலாளர் அன்பழகன், நீதிமன்ற பணியாளர் செந்தில்ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் வள்ளிநாயகி வரவேற்றார். நீதிமன்றத்தின் அலுவலக நிர்வாக உதவியாளர் அருண்குமார் நன்றி கூறினார்.

Related Stories: