7 மாத பெண் குழந்தை மரணத்தில் சந்தேகம் ஒரு மாதத்திற்கு பின் உடல் தோண்டி எடுப்பு

சோழவந்தான் : விக்கிரமங்கலம் அருகே புதைக்கப்பட்ட 7 மாத பெண் குழந்தை உடல் நேற்று தோண்டி எடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலத்தை அடுத்த சக்கரப்பநாயக்கனூரைச் சேர்ந்தவர் டிரைவர் செல்லப்பாண்டி. இவரது மனைவி பாண்டிச்செல்வி. இவர்களது குழந்தைகள் ஒளி தர்ஷன் (2), பிரியதர்ஷினி (7 மாதம்). இந்நிலையில் கடந்த 7ம் தேதி வீட்டின் அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து பிரியதர்ஷினி இறந்ததாக கூறப்படுகிறது. இறந்த பெண் குழந்தையின் உடலை வீட்டின் முன்பே புதைத்து விட்டனர்.

இந்நிலையில், விக்கிரமங்கலம் அரசு மருத்துவர் மற்றும் குழந்தைகள் நல சமூக பாதுகாப்பு அலுவலர் ஆகியோர் குழந்தை இறப்பை மறைத்து புதைத்ததாக கூறிய தகவலின் பேரில். விஏஓ முத்துமணி விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து, நேற்று உசிலம்பட்டி தாசில்தார் விஜயலெட்சுமி, செக்கானூரணி இன்ஸ்பெக்டர் சிவசக்தி முன்னிலையில் குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.

மருத்துவர்கள் சிவக்குமார், ராதாமணி ஆகியோர் அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்து, முக்கிய உடல் பாகங்களை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதன் முடிவு வந்த பின்னரே தண்ணீரில் மூழ்கியதால் இறந்ததா அல்லது வேறு காரணமா என தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். புதைக்கப்பட்ட குழந்தையின் உடல் 40 நாட்களுக்கு பிறகு நேற்று தோண்டி எடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: