×

வான்கடே எனக்கு மிகவும் பிடித்த மைதானம்: சதம் விளாசிய ஆட்டநாயகன் ஜோஸ் பட்லர் பேட்டி

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த 34வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்-டெல்லி கேபிட்டல்ஸ அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 222 ரன் குவித்தது. தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் 65 பந்தில் 9 பவுண்டரி, 9 சிக்சருடன் 116 ரன் விளாசினார். தொடர்ச்சியாக அவர் விளாசிய 2வது சதம் இதுவாகும். இந்த தொடரில் இது அவருக்கு 3வது சதம்.

தேவ்தத் படிக்கல் 54 (35 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் சஞ்சு சாம்சன் நாட் அவுட்டாக 46(19பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) ரன் அடித்தனர். பின்னர் களம் இறங்கிய டெல்லி அணியில் வார்னர் 28(14பந்து), பிரித்வி ஷா 37 (27பந்து), சர்ப்ராஸ்கான் 1, கேப்டன் ரிஷப் பன்ட் 44(24பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), அக்சர் பட்டேல் 1, ஷர்துல் தாகூர் 10 ரன்னில் ஆட்டம் இழந்தனர். கடைசி 2 ஓவரில் 36 ரன் தேவைப்பட்ட நிலையில் 19வது ஓவரை வீசிய பிரசித்கிருஷ்ணா, ஒரு ரன் கூட கொடுக்காமல், லலித் யாதவின் (37) விக்கெட்டையும் கைப்பற்றி திருப்புமுனை ஏற்படுத்தினார்.

கடைசி ஓவரில் 36 ரன் தேவைப்பட்ட நிலையில் ஒயட் மெக்காய் வீசிய அந்த ஓவரில் முதல் 3 பந்தை ரோவ்மன் பவல் சிக்சருக்கு அனுப்பினார். 4வது பந்து டாட் பால் ஆன நிலையில் 5வது பந்தில் 2 ரன் எடுத்த பவல், (36 ரன், 15 பந்து, 5 சிக்சர்) கடைசி பந்தில் கேட்ச் ஆனார். முடிவில் டெல்லி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 207 ரன் எடுக்க 15 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற்றது. 7வது போட்டியில் 5வது வெற்றிபெற்ற அந்த அணி பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது.

டெல்லி 4வது தோல்வியை சந்தித்தது. ராஜஸ்தான் பந்துவீச்சில் பிரசித் கிருஷ்ணா 3, அஸ்வின் 2 விக்கெட் வீழ்த்தினர். ஜோஸ் பட்லர் ஆட்டநாயகன் விருது பெற்றார். வெற்றிக்கு பின் ராஜஸ்தான் கேப்டன் சாம்சன் கூறியதாவது: கடைசி ஓவரில் நோ பால் சர்ச்சையில் நடுவர் தனது முடிவில் தெளிவாக இருந்தார் என நினைக்கிறேன். நாங்கள் மெக்காய்க்கு ஆதரவாக இருந்தோம். 3 சிக்சரை விட்டுக்கொடுத்த பிறகு அடுத்த பந்தை வீசுவது எளிதானதல்ல. நாங்கள் ஸ்லோபால் வீச விரும்பினோம். அது உண்மையில் வேலை செய்தது.

கடைசி ஆட்டமும் கடினமானதாக இருந்தது, பவல் போன்ற ஹிட்டர்கள் இருக்கும்போது அணியில் உள்ளவர்களை நம்புவது முக்கியம். டாஸ் இழந்தது பற்றி எதுவும் சொல்ல முடியாது. ஆனால் எங்கள் பந்துவீச்சாளர்கள் இந்த சூழ்நிலையில் பந்துவீச போதுமான அனுபவம் பெற்றவர்கள். அஸ்வின், சாஹல் நன்றாக பந்துவீசினர். மிடில் ஓவரில் இருவரின் அனுபவம் நன்றாக இருக்கிறது, நாங்கள் அதை தொடர விரும்புகிறோம். கேட்சுகளை கைவிடுவது சகஜம், கடந்த போட்டியில் நான் ஒரு கேட்சை விட்டேன்.

அதில் இருந்து மீள்வது எப்படி என்பதை வீரர்களிடம் கூறினேன். பட்லர் நன்றாக விளையாடி வருகிறார், என்றார். ஆட்டநாயகன் ஜோஸ் பட்லர் கூறுகையில், ``இந்த மைதானம் எனக்கு மிகவும் பிடிக்கும். எனது முதல் ஐபிஎல் மும்பை அணிக்காக இங்குதான் ஆடினேன். எனது வாழ்க்கையின் சிறந்த வடிவத்தை நான் அனுபவித்து வருகிறேன். இதனை நான் எல்லா வழிகளிலும் தொடர வேண்டும். இது ஒரு அருமையான சூழல், நான் மிகவும் ரசித்தேன். எங்களிடம் நம்பமுடியாத வலிமையான பக்கம் உள்ளது.

தொடரில் இன்னும் பாதி போட்டிகள் உள்ளது. நாங்கள் இந்த பார்மை முழுவதும் தொடர வேண்டும். நாங்கள் நல்ல பார்ட்னர் ஷிப் உருவாக்க முடிந்தது. தேவ்தத் மறுமுனையில் அருமையாக விளையாடினார், என்றார்.

Tags : Wankhede ,Centurion ,Jose Butler , Wankhede is my favorite venue: Interview with Centurion captain Jose Butler
× RELATED ரஞ்சிக் கோப்பையை வென்றது மும்பை அணி..!!