கல்லணை, வீராணம் ஏரி , காளிங்கராயன் அணைக்கட்டு.. உலக பாரம்பரிய நீர்ப்பாசன கட்டமைப்பு விருதுகளுக்கு தேர்வாகின!!

சென்னை : சர்வதேச நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் ஆணையம் (ICID), ஒவ்வொரு ஆண்டும், உலக பாரம்பரிய நீர்ப்பாசனக் கட்டமைப்புகள் (WHIS) மற்றும் நீர் சேமிப்பு (WatSave) விருதுகள் போன்ற விருதுகளை அறிவிக்கிறது.  ICID சார்பாக, இந்திய தேசிய நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் குழுமம் (INCID) ஒவ்வொரு ஆண்டும் இந்தியா மாநிலங்களில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் தகுதியான முன்மொழிவுகளை ICID அமைப்பிற்குப் பரிந்துரைக்கிறது. இதன்படி ஜுலை 2021-ல் தமிழ்நாடு நீர்வளத்துறை சார்பில் கல்லணை, காளிங்கராயன் அணைக்கட்டு, வீராணம் நீர்த்தேக்கம், பேச்சிப்பாறை அணை, மதுராந்தகம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி ஆகிய 6 நீர்த்தேக்கக் கட்டமைப்புகளை உலக பாரம்பரிய நீர்ப்பாசனக் கட்டமைப்புகளாக அறிவிக்கக் கோரி அனைத்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கப்பட்டது.

டிசம்பர் 2021-ல் சர்வதேச நீர்ப்பாசன மற்றும் வடிகால் ஆணையத்திலிருந்து ஆய்வுக்குழு தமிழ்நாடு நீர்வளத்துறை விண்ணப்பித்த கட்டமைப்புகளை நேரில் ஆய்வு செய்தனர். இதன் தொடர்ச்சியாக, உலக பாரம்பரிய நீர்ப்பாசன கட்டமைப்புகளுக்கான விருதுகளுக்கு கல்லணை, வீராணம்ஏரி மற்றும் காளிங்கராயன் அணைக்கட்டு ஆகிய 3கட்டமைப்புகள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாட்டிற்கும் 4 விருதுகள் சர்வதேச அமைப்பால் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. 2021-ஆம் ஆண்டிற்கு இந்தியாவிற்கு 4 விருதுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு

3 விருதுகள் பெறுகிறது என்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்.

தேர்வு செய்யப்பட்ட பாசன கட்டமைப்புகள் பற்றிய விவரம்

1.    கல்லணை

வரலாற்று சிறப்பு மிக்க கல்லணை கி.பி.2-ஆம் நூற்றாண்டில் சோழ மன்னன் கரிகாலனால் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஒரு பழமையான அணையாகும். இது உலகின் நான்காவது பழமையான நீர்மாற்று அமைப்பு அல்லது நீர் ஒழுங்குபடுத்தும் கட்டமைப்பாகும். இந்தியாவில் இன்னும் பயன்பாட்டில் உள்ள பழமையான கட்டமைப்பாகும். அதன் அற்புதமான கட்டடகலை காரணமாக இது தமிழ்நாட்டின் முதன்மையான சுற்றுலாத்தலமாக திகழ்கிறது. கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய் மற்றும் கீழ்அணைக்கட்டு என எண்ணற்ற நீர்நிலைகளாக பிரிந்து, டெல்டா முழுமைக்கும் பாசனவசதிகளை அளித்து, பாசனக்காலம் முழுவதும் திறம்பட ஒழுங்குபடுத்தப்பட்டு, முழு டெல்டாபகுதியான 13,20,116 ஏக்கர் நிலமும் பயனடைகிறது. இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நிலை நிறுத்துகிறது. மேலும், நிலத்தடி நீர்பாதுகாப்பு, குடிநீர்வசதிகள் மற்றும் மீன்பிடித்தல் போன்றவற்றிற்கும் உறுதுணையாக உள்ளது.

2.     வீராணம் நீர்த்தேக்கம்

கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் நீர்த்தேக்கம் 9-ஆம் நூற்றாண்டில் முதலாம் பராந்தக சோழன் காலத்தில் உருவாக்கப்பட்டது. வீரநாராயண பெருமாள் கோவிலின் பெயரால் வீரநாராயணன்ஏரி எனப்பெயரிடப்பட்டு, தற்போது வீராணம்ஏரி என்று அழைக்கப்படுகிறது. இதன் மூலம் கடலூர் மாவட்டத்தின் காட்டு மன்னார் கோவில் வட்டம் முழுவதும் மற்றும் சிதம்பரம் வட்டத்தில் 102 கிராமங்களில் உள்ள 44,856 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறுவதோடு சென்னை மாநகருக்கு குடிநீர்வழங்கும் முக்கிய நீர்ஆதாரமாகவும் விளங்குகிறது.

3. காளிங்கராயன் அணைக்கட்டு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி ஆற்றின் குறுக்கே காளிங்கராயன் அணைக்கட்டு சுமார் 740 ஆண்டுகளுக்கு முன்பு கொங்குபகுதியின் மன்னரான காளிங்கராயன்கவுண்டர் என்பவரால் கட்டப்பட்ட பழமையான அணையாகும். இந்தியாவில் இன்னும் பயன்பாட்டில் உள்ள பழமையான கட்டமைப்பாகும். இதனால் ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டங்களில் சுமார் 15743 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறுகிறது. உள்ளூர் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இந்த அணைக்கட்டைத் தங்கள் வாழ்வாதாரத்தின் ஒரு பகுதியாக கருதுவதால் அவர்கள் அனைவரும் அணைக்கட்டுக்கு ஆன்மீக முக்கியத்துவத்தை அளித்து வருகிறார்கள். மேற்கண்ட விருதுகள் நவம்பர்  2022, 7ம் தேதி மாநிலங்களுக்கு வழங்கப்படவுள்ளது.  

நீர்ப்பாசனக் கட்டமைப்புகளைப் பராமரித்தல் மற்றும் நீர் சேமிப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் சர்வதேச அமைப்பால் இத்தகைய விருது வழங்கப்படுவது அனைத்து மாநிலங்களையும் ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது.  மேலும், 2022 ஆண்டிற்கான விருதுக்கு தமிழ்நாட்டின் சார்பில் மேலும் பத்துக்கும் மேற்பட்ட பாரம்பரிய நீர்ப்பாசனக் கட்டமைப்புகளுக்கான உரிய ஆவணங்களுடன் முன்மொழிவு அனுப்பப்படவுள்ளது.

Related Stories: