×

எடையூர் சங்கேந்தி குடியிருப்பு பகுதியில் குரங்குகள் தொல்லை-பொதுமக்கள் அச்சம்

முத்துப்பேட்டை : எடையூர் சங்கேந்தி குடியிருப்பு பகுதிகளில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளதால் குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த எடையூர் சங்கேந்தி குடியிருப்பு பகுதிகளில் சமீபகாலமாக குரங்குகள் சில குடியிருப்புகள் உள்ளே புகுந்து பொருட்களை சூறையாடுவதும், அதேபோல் தோட்டங்களில் மரம் செடிகளை சேதப்படுத்துவதும் போன்ற செயல்களின் ஈடுபட்டு வருகிறது. அதேபோல் தொல்லை கொடுக்கும் குரங்கை வீட்டில் உள்ளவர்களும், கிராம மக்களும் விரட்டும்போது அவர்களை சீண்டி வருகிறது. இதனால் மக்கள் அச்சம் அடைகின்றனர். மேலும் வீட்டிற்குள் உள்ளே சர்வசாதாரணமாக உலாவி வருவதால் குழந்தைகள் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர்.

அதனால் தொல்லை கொடுக்கும் இந்த குரங்குகளை மீட்டு காடுகளில் கொண்டுபோய் விட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்து சென்றும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த நாகராஜன் கூறுகையில்:

எங்கள் பகுதியில் குரங்குகள் வீட்டிற்குள் புகுந்து விடுவதும், வீட்டிலுள்ள பொருட்களை சேதப்படுத்துவதும் சில மாதங்களாக நடந்து வருகின்றன. இவற்றை வனத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தப்பயனும் இல்லை. வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த சில வருடங்களுக்கு முன்பு தஞ்சாவூரில் குரங்கு வீட்டுக்குள் புகுந்து கைக்குழந்தையை தூக்கிச்சென்று தண்ணீரில் வீசியதில் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை பொது மக்கள் இன்னும் மறக்கவில்லை. எனவே எங்கள் பகுதியில் குரங்குகளின் சேட்டை அதிகமாக இருப்பதால் வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து குரங்குகளின் தொல்லையிலிருந்து மக்களை காக்க வேண்டும் என்றார்.

Tags : Edayur Sankenthi , Muthupet: To catch and dispose of monkeys as monkeys are a nuisance in Edayur Sankenthi residential areas
× RELATED நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா...