காரைக்காலில் அரசு, தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மோதல், வாக்குவாதம்-ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

காரைக்கால் : காரைக்காலில் தனியார் பேருந்து செல்லும் நேரத்தில் புதுச்சேரி அரசுப் பேருந்து சென்றதால் நடுரோட்டில் அரசு பேருந்தை வழிமறித்து தனியார் பேருந்து ஓட்டுனர் வாக்குவாதம் செய்தார். இதனால் காரைக்கால் - திருச்சி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.காரைக்கால் திருச்சி இடையே தனியார் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தனியார் பேருந்து காரைக்காலுக்கு செல்லும் நேரத்தில் அம்பகரத்தூரில் இருந்து காரைக்காலுக்கு புதுச்சேரி அரசு போக்குவரத்து பேருந்து இயக்கப்பட்டுள்ளது.

அரசுப் பேருந்து இயக்கக் கூடிய நேரத்தை தவிர்த்துவிட்டு தனியார் பேருந்து வரும் நேரத்தில் இயங்குவதால் தனியார் பேருந்து ஓட்டுநர் பலமுறை புதுச்சேரி போக்குவரத்து துறையில் புகார் செய்தும் ஏதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மதியம் இதேபோல் தனியார் பேருந்து வரும் நேரத்தில் அரசு பேருந்து இயங்கியதால் தனியார் பேருந்து ஓட்டுனர் ஆத்திரமடைந்து திருநள்ளாறு சாலையில் இரு பேருந்தும் அதி வேகமாக ஒருவரை ஒருவர் முந்திச் செல்ல முயற்சித்தனர். அரசுப்பேருந்து முன் செல்லும் போது தனியார் பேருந்து ஓட்டுநர் அரசு பேருந்தை திருநள்ளார் பிரதான சாலையில் வழிமறித்து பேருந்தை சாலை நடுவே நிறுத்தியுள்ளார்.

மேலும் அரசு பேருந்து, தனியார் பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பேருந்தில் பயணிகள், கூட்டம், பள்ளி முடித்து செல்லும் மாணவ மாணவிகள் இருந்து பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். மேலும் இதனால் திருச்சி பிரதான சாலையான காரைக்கால் திருநள்ளாறு சாலையில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் சமாதான பேச்சு அடுத்து இறுதியில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் காரைக்கால் - திருச்சி பிரதான சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: