தமிழியக்கம் சார்பில் திருவள்ளுவர் விழா திருக்குறளுக்கு ஈடான நூல் எதுவும் இல்லை-விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் பேச்சு

வேலூர் : திருக்குறளுக்கு ஈடான நூல் உலகில் வேறெதுவும் இல்லை என்று வேலூர் விஐடியில் நடந்த தமிழியக்கம் சார்பில் நடந்த திருவள்ளுவர் விழாவில் பேசிய தமிழியக்க நிறுவனர் மற்றும் விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் குறிப்பிட்டார்.தமிழியக்கம் சார்பில் நடந்த திருவள்ளுவர் விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு, கவிதை, கட்டுரை மற்றும் பாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு விஐடி பல்கலைக்கழகம் சென்னாரெட்டி அரங்கில் பரிசளிப்பு விழா நேற்று நடந்தது.

விழாவுக்கு தமிழியக்க நிறுவன தலைவரும், விஐடி வேந்தருமான ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி பேசியதாவது: உலகளவில் மிகவும் பழமையான சிந்து சமவெளி நாகரீக காலத்தில் பேசப்பட்ட மொழிதான் தமிழ் மொழி. அதேபோல் உலகின் முதல் இலக்கண நூலும் தமிழுக்குத்தான் உண்டு. உலகளவில் 160க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழ் மொழி பேசப்படுகிறது.  திருக்குறளுக்கு ஈடான  ஒரு நூல் உலகில் வேறு எதுவும் கிடையாது. உலகின் அனைத்து நாடுகளுக்கும், மொழிகளுக்கும் பொதுவான ஒரே நூல் திருக்குறள்தான். உலகளவில் 100க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரே நூலும் திருக்குறள்தான். இவ்வாறு அவர் பேசினார்.

 

தொடர்ந்து சிறப்பு விருந்தினர் மொரீசியஸ் நாட்டின் முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் பரசுராமன் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை தமிழியக்க நிறுவனரும், தலைவருமான விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன், மொரீஷியஸ் நாட்டின் முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் பரசுராமன் ஆகியோர் வழங்கினர்.

முன்னதாக தமிழியக்க மாநில செயலாளர் சுகுமார் வரவேற்றார். பொதுசெயலாளர் அப்துல்ரகுமான், பொருளாளர் வே.பதுமனார், ஒருங்கிணைப்பாளர்கள் வடதமிழகம் வணங்காமுடி, தென்தமிழகம் சிதம்பரபாரதி ஆகியோர் பேசினர். மாவட்ட செயலாளர் ஜெயகர் நன்றி கூறினார்.

Related Stories: