நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடாக நெல் விற்றால் குண்டர் சட்டத்தில் கைது-திருவண்ணாமலை கலெக்டர் எச்சரிக்கை

திருவண்ணாமலை :  நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடாக நெல் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் குண்டர் சட்டத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் பா.முருகேஷ் தலைமையில் நேற்று நடந்தது. அதில், டிஆர்ஓ பிரியதர்ஷினி, வேளாண் இணை இயக்குநர் முருகன், ஆர்டிஓ வெற்றிவேல் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், விவசாயிகள் தரப்பில் தெரிவித்த கோரிக்கைகள் மற்றும் குறைகள் விபரம்:

திருவண்ணாமலை மாவட்டத்தில், யூரியா தட்டுப்பாடு இன்னும் தீரவில்லை. கூட்டுறவு சங்கங்களில் சங்க தலைவர் பரிந்துரைக்கும் நபர்களுக்கு மட்டுமே அதிகாரிகள் யூரியா தருகின்றனர். அதேபோல், கூட்டுறவு சங்கங்களில் விவசாய பயிர் கடன் வழங்குவதிலும் பாரபட்சமான செயல்பாடு உள்ளது. உண்மையான விவசாயிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

மேலும், உரம் விலை அதிகரிக்கும் என்ற தகவல் வெளியாகி இருப்பதால், தனியார் விற்பனை நிலையங்களில் உரத்தை பதுக்கியிருக்கிறார்கள். டிஏபி, காம்ப்ளக்ஸ் போன்றவை கிடைக்கவில்லை. ஏற்கனவே, யூரியாவுக்காக தவித்த விவசாயிகள் தற்போது உரத்துக்காக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பதுக்கலில் ஈடுபடும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போளூர் மற்றும் திருவண்ணாமலையில் மூடப்பட்ட தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு சப்ளை செய்த விவசாயிகளுக்கு உரிய தொகையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுதொடர்பாக, ஆலை நிர்வாகங்களை அழைத்து கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இல்லாவிட்டால், ஆலைகள் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், இடைத்தரகர்கள், வியாபாரிகள் கொண்டுவரும் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. விவசாயிகள் கொண்டுவரும் நெல் மூட்டைகளை எடை போடாமல் அலைக்கழிக்கின்றனர். நெல் எடைபோட பணம் வசூலிக்கின்றனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.அதைத்தொடர்ந்து, கலெக்டர் முருகேஷ் தெரிவித்ததாவது:நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். கடந்த சொர்ணவாரி பட்டத்தில் 18 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் நடந்தது. கடந்த 3 மாதங்களில் 52 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் நடந்திருக்கிறது. மேலும், வரும் ஜூன் மாதம் வரை நெல் விற்பனை செய்ய விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்.

எனவே, இதுவரை நெல் விற்பனை செய்தவர்கள் மற்றும் பதிவு செய்துள்ளவர்களின் விபரங்களை சேகரித்து, அதிகாரிகள் குழு விசாரணை நடத்த உள்ளனர். அதில், விவசாயிகள் அல்லாத நபர்கள் முறைகேடாக நெல் விற்றது தெரியவந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: