×

மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை புதிய பெட்டிகளுடன் மலை ரயில் சோதனை ஓட்டம்

மேட்டுப்பாளையம் : சென்னை தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட மலை ரயிலுக்கான புதிய 22 பெட்டிகளுடன் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை வெற்றிகரமாக இயக்கப்பட்டது.15 நாட்கள் சோதனை ஓட்டத்திற்கு பிறகு மலை ரயிலுடன் இணைக்கப்பட உள்ளது.மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரிக்கு சமவெளி பகுதிகளை தவிர வெளிமாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை கண்டு மகிழ தினமும் வருகின்றனர்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்ல சுற்றுலா பயணிகள் நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயிலில் பணம் செய்ய அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். 208 வளைவு, 16 குகை, 250 பாலங்களை கடந்து 5 மணி நேர பரவசமான குளுகுளு பயணம் அலாதியானது.சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை மேலும் சிறப்பாக  கண்டு ரசிக்க மலை ரயிலுக்கு புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய 22 பெட்டிகளில் சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது. கடந்த 2020ம் ஆண்டே அவை மேட்டுப்பாளையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பெட்டிகள் சோதனை ஓட்டத்திற்கு பிறகு ரயில் பெட்டியுடன் இணைக்கலாம் என அதிகாரிகள் திட்டமிட்டனர்.

இந்நிலையில் தான், உலகை மிரட்டிய கொரோனா தொற்று பரவியது. இதனால் சோதனை ஓட்டம் நடக்கவில்லை. தடுப்பூசி மற்றும் கொரோனாவின் தீவிர தன்மை தற்போது குறைந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை சோதனை ஓட்டம் நடத்த அதிகாரிகள் முடிவு செய்தனர்.இதற்காக லக்னோ இந்திய ரயில்வே ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு துறை சார்ந்த துணை இயக்குனர் அனைஞ்சை மிஸ்ரா தலைமையில் 20 பேர் கொண்ட குழுவினர் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை இந்தப் பெட்டிகள் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டன. நேற்று முதல் 15 நாட்கள் இந்த சோதனை நடைபெறும். இந்த சோதனையில் நவீன கருவிகள் பயன்படுத்தப்பட்ட பெட்டியின் தரம் குறித்தும், பிரேக்கிங் சிஸ்டம் குறித்தும் ஆய்வு நடத்தப்படும். ஆய்வுக்கு பிறகு இந்தப் பெட்டிகள் பயணிகள் ரயிலில் இயக்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு சுற்றுலா பயணிகள் பெரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Tags : Gunnur , Mettupalayam: A test run took place yesterday with 22 new compartments for the mountain train manufactured at the Chennai factory.
× RELATED மழை காரணமாக குன்னூர் – மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் மண் சரிவு..!!