×

ஒன்றிய தொகுப்பில் இருந்து 796 மெகாவாட் மின்சாரம் வழங்கப்படாததே தமிழகத்தில் திடீர் மின் தடைக்கு காரணம்: அமைச்சர் செந்தில்பாலாஜி பதில்; விளக்கம் திருப்தி இல்லை என அதிமுக வெளிநடப்பு

தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக நிலவும் மின்வெட்டு பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும் என்றார். இதை சிறப்பு கவன ஈர்ப்பாக எடுத்துக்கொண்ட சபாநாயகர் அப்பாவு, உறுப்பினர்களை பேச அனுமதி அளித்தார். எடப்பாடி பழனிசாமி: தமிழகத்தில் சில நாட்களாக மின்வெட்டு பிரச்னை இருந்து வருகிறது. இதனால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்துக்கு ஒருநாள் மின் தேவை 16,500 மெகாவாட். ஆனால், மின் உற்பத்தி என்பது 12,800 மெகாவாட் முதல் 13,100 மெகாவாட் வரைதான் இருக்கிறது. இதனால், மின்வெட்டு ஏற்படுகிறது.

தமிழகத்துக்கு தினமும் 50 ஆயிரம் டன் நிலக்கரியை மத்திய அரசிடம் இருந்து வாங்குகிறோம். இப்போது, கோடை காலம். மின்தேவை அதிகமாக இருக்கிறது. அதை ஈடுகட்ட மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். ஆனால், போதுமான நிலக்கரி கையிருப்பு இல்லை. சத்தீஸ்கரில் இருந்து தமிழகத்திற்கு மின்பாதை ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக பிற மாநிலங்களில் இருந்து 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை கொண்டுவர முடியும். ஆனால், அப்படி எதுவும் பெறப்படவில்லை என்று நினைக்கிறேன். தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மொத்தம் உள்ள 5 அலகுகளில், 3 அலகுகளில்தான் மின் உற்பத்தி நடக்கிறது. அதற்கு நிலக்கரி தட்டுப்பாடுதான் காரணம்.

இதனால், மின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. தொழிற்சாலைகளும், வேளாண்மையும் பாதிக்கப்படுகிறது. மக்கள் இரவு நேரங்களில் வீட்டில் நிம்மதியாக தூங்க முடியவில்லை. மாணவர்களும் மின்தடையால் படிக்க முடியாமல் பாதிக்கப்படுகின்றனர். எனவே, தடையில்லா மின்சாரத்தை வழங்க அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?  இவ்வாறு அவர் பேசினார். இதே பிரச்னை தொடர்பாக காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, ஜி.கே.மணி (பாமக) ஆகியோரும் பேசினர்.

எதிர்க்கட்சி தலைவர்களின் பேச்சுக்கு தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பதில் அளித்து பேசியதாவது:
தமிழ்நாட்டில் ஒரு நாள் மின் நுகர்வு கடந்த 18ம் தேதி 317 மில்லியன் யூனிட்டாக இருந்தது. 19ம் தேதி 343 மில்லியன் யூனிட்டாகவும், 20ம் தேதி 347 மில்லியன் யூனிட்டாகவும், 21ம்தேதி (நேற்று முன்தினம்) 363 மில்லியன் யூனிட்டாகவும் மின் நுகர்வு உயர்ந்துள்ளது. கோடை காலத்தை எதிர்கொள்ள முதல்வரின் உத்தரவுப்படி, ஏப்ரல், மே மாதங்களுக்கு 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தனியாரிடம் இருந்து குறைந்த விலையில் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, வாங்கப்பட்டு வருகிறது. தற்போது, ஒன்றிய அரசு தொகுப்பில் இருந்து 796 மெகாவாட் மின்சாரம் தமிழகத்துக்கு வழங்கப்படவில்லை. இதை சரிசெய்ய தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்கவும், சொந்த மின் உற்பத்தியை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனல் மின்நிலையங்களில் சொந்த மின் உற்பத்தி 2020-2021ம் ஆண்டு 15,553 மில்லியன் யூனிட்டாக இருந்தது. அது 2021-2022ம் ஆண்டு 20,391 மில்லியன் யூனிட்டாக அதிகரித்தது. அதாவது, 31 சதவீதம் அதிகரித்தது. கடந்த ஓராண்டில் ஒரு டன் நிலக்கரி கூட இறக்குமதி செய்யப்படவில்லை. உள்நாட்டு நிலக்கரி மூலமே மின் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு மின் உற்பத்திக்கு 72,000 டன் நிலக்கரி தேவைப்படுகிறது. ஏப்ரல், மே மாதங்களுக்கு 4.80 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய ஒப்பந்தம் கோரப்பட்டது. 4 நிறுவனங்களிடம் அந்த பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாள் மின் தடைக்கு மத்திய தொகுப்பில் இருந்து 796 மெகாவாட் மின்சாரம் வழங்கப்படாததே காரணம். ஆனால், நகர் பகுதிகளில் 41 இடங்களில்தான் இந்த மின்தடை பாதிப்பு இருந்தது.

கடந்த ஆட்சியில் ஏதோ மின்தட்டுப்பாடே இல்லாததுபோல் பேசுகிறார்கள். 2016ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை 68 முறை இதேபோன்ற சூழல் இருந்துள்ளது. தற்போது, ஒருமுறை தான் அப்படி நடந்துள்ளது.  நமக்கு தேவையான மின்சாரத்தை நாமே உற்பத்தி செய்து கொள்ளும் வகையில், அடுத்த 5 ஆண்டுகளில் மின்மிகை மாநிலமாக தமிழகம் உருவாகும். தற்போதைய மின்தடையால் பொதுமக்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் எந்த பாதிப்பும் இருக்காது. இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “நிலக்கரி இருப்பு இல்லாததால்தான் மின்தடை ஏற்பட்டுள்ளது. ஆனால், இதே அவையில் போதுமான அளவு நிலக்கரி கையிருப்பில் இருப்பதாக சில தினங்களுக்கு முன் சொன்னீர்கள். அமைச்சரின் பதிலில் திருப்தி இல்லாத காரணத்தால், அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்கிறோம்” என்று கூறிவிட்டு, வெளிநடப்பு செய்தனர்.

Tags : Tamil Nadu ,Minister ,Senthilpalaji ,AIADMK , Senthilpalaji, Union Minister for Power and Energy, AIADMK walkout
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...