×

நவராத்திரியை அலங்கரிக்கும் வானவில் தோரணம்!

நன்றி குங்குமம் தோழி

பண்டிகை என்றால் நம் வீட்டை முதலில் அலங்கரிப்பது மாவிலை தோரணம். வாசலில் கட்டப்படும் இந்த தோரணம் ஒரு நாளில் வாடி வதங்கிடும். அப்படி இல்லாமல் என்றும் நம் வாசலை அழகாக வரவேற்கவும், பண்டிகையினை வண்ணமயமாக கொண்டாட வீட்டிலேயே எளிய முறையில் சுலபமாக மாவிலை தோரணம் செய்யலாம்.

இந்த மாவிலை தோரணத்தை வீட்டு வாசலில்தான் மாட்ட வேண்டும் என்றில்லை. பூஜை அறை மற்றும் கொலு படிக்கட்டுகளிலும் அலங்கரிக்க பயன்
படுத்தலாம். இவை வாடி போகாது. அவ்வப்போது சுத்தம் செய்தாலே போதும், என்றும் புதுப்பொலிவுடன் இருக்கும். மாவிலை தோரணம் எவ்வாறு படிப்படியாக செய்யலாம் என்று விளக்கப் படத்துடன் விவரிக்கிறார் சுதா.

தேவையான பொருட்கள்

(1) OHP ஷீட் - 3
(2)  கிளாஸ் கலர்ஸ் பெயிண்ட் - பச்சை, மஞ்சள் மற்றும் விருப்பமான நிறங்கள்
(3) சிறு வளையம்   -   2
(4) இட்லி வடிவ மணிகள் - தேவைக்கு ஏற்ப (அலங்கரிக்க)
(5) 3D கோன் லைனர் - 2 வண்ணங்கள் (விருப்பமானது)
(6) கியர் ஒயர் - 2 மீட்டர்
(7)கத்தரிக்கோல் - வெட்டுவதற்கு.

மேற்கூறிய அனைத்து பொருட்களும் ஸ்டேஷனரி கடைகளில் (Stationery Store) கிடைக்கும்.

செய்முறை

ஸ்டெப் - 1:  இலை மற்றும் பூ மாதிரி வடிவங்களை சார்ட் பேப்பரில் வரைந்து கொள்ளவும். பிறகு அதனை தனியாக கத்தரித்துக் கொள்ளவும். சார்ட் பேப்பரில் கத்தரித்த இலை மற்றும் பூ வடிவங்களை OHP ஷீட்டில் மார்க்கரால் வரைந்து கொள்ளவும். அதாவது 5 அல்லது 6 பூ வடிவங்கள் மற்றும் இலைகள்... உங்கள் நிலவாசற்படியின் அளவிற்கு ஏற்ப அளந்து அதன் நீளத்திற்கு தகுந்த மாதிரி எண்ணிக்கை எடுத்துக் கொள்ளவும்.

ஸ்டெப் - 2: வரைந்த எல்லா வடிவத்தின் மீதும் 3D கோன் லைனரால் அவுட்லைன் வரைய வேண்டும்.

ஸ்டெப் - 3: அவட்லைன் காய்ந்த பிறகு அதனுள், நாம் விரும்பும் கண்ணாடி நிறங்கள் கொண்டு நிரப்பவும். இலை என்றால் அதில் பச்சை மற்றும் மஞ்சள் நிறங்கள் படத்தில் கொடுக்கப்பட்டு இருப்பது போல் நிறங்களை நிரப்பிக் கொள்ளலாம். பூக்களுக்கு உங்களுக்கு பிடித்த சிகப்பு, பிங்க், மஞ்சள், ஆரஞ்ச் என எது வேண்டும் என்றாலும் கொடுக்கலாம். ஒரே நிறமாகவும் இருக்கலாம். அல்லது இரண்டு நிறங்களை மிக்ஸ் செய்தும் வண்ணம் தீட்டலாம். அரை மணி நேரம் காய விடவும்.

ஸ்டெப் - 4: பிறகு இலை, பூ வடிவங்களை தனித்தனியே வெட்டி எடுக்கவும்.

ஸ்டெப் - 5: இப்பொழுது இலையையும், பூக்களுக்கு இடையே ஒரு மணி என ேகார்க்க வேண்டும். முதலில் ஊசியில் கியர் ஒயரை கோர்க்கவும். பிறகு இலை மற்றும் பூக்கள் பக்கவாட்டில் இணைத்து அதில் மணியையும் கோர்த்து கியர் ஒயரால் இணைக்கவும். இலை, மணி, பூ என மாறி, மாறி கோர்க்கவும்.  போதுமான நீளம் வந்தவுடன் நிறுத்திக்கொள்ளவும். இலை மற்றும் பூக்களுக்கு இடையே மணியை கோர்ப்பதற்கு பதில் இரண்டையும் கோர்த்துவிட்டு நடுவில் பெவிக்கால் கொண்டு மணியினை ஒட்டவும் செய்யலாம்.

ஸ்டெப் - 6 : தோரணம் கோர்த்து முடித்தவுடன் அதை ஆணியில் மாட்டுவதற்கு இறுதியில் வளையங்களை கோர்க்கவும். இப்பொழுது குறைவான முதலீட்டில் வாடாத அழகான மாவிலை தோரணம் தயார். இது போன்ற தோரணங்களை வீட்டு நிலப்படிகளில் மட்டுமே இல்லாமல் நம் ஒவ்வொரு அறைகளின் நுழைவாயிலிலும் கட்டினால் பார்க்க அழகாக இருக்கும். அதில் பூ, இலை இல்லாமல் வேறு டிசைன்கள் கொண்டும் தயாரிக்கலாம்.

தொகுப்பு: ஜி.சிவக்குமார்

Tags : Rainbow ,Navratri ,
× RELATED மங்கலங்கள் அருளும் மகா சிவராத்திரியின் தத்துவமும் தரிசனமும்