கிராமங்களில் 3 முதல் 6ம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின மாணவிகளுக்கு ரூ.500, ரூ.1,000 ஊக்கத்தொகை: அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவிப்பு

சென்னை: சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வெளியிட்ட அறிவிப்பு:

கிராமப்புறங்களில் பயிலும் சிறுபான்மையின மாணவியர் இடைநிற்றல் இன்றி, தொடர்ந்து கல்வி பயில ஊக்கத்தொகையாக 3ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவியருக்கு ரூ.500ம் மற்றும் 6ம் வகுப்பு பயிலும் மாணவியருக்கு ரூ.1,000ம் ரூ.2 கோடியே 75 லட்சத்து 60 ஆயிரம் செலவில் வழங்கப்படும். கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கும் பொருண்மைக்கென வழிமுறைகள் உருவாக்கப்பட்டு இத்துறை மூலம் செயல்படுத்தப்படும்.

சென்னையில் உள்ள கிறிஸ்தவர்களுக்கான அடக்கஸ்தலங்கள் அமைக்க புதிய நிலம் கையகப்படுத்தவும், ஏற்கனவே உள்ள அடக்கஸ்தலங்களில் மீண்டும் அடக்கம் செய்வதற்கு உள்ள நிபந்தனைகளை தளர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் ‘சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா’ மாவட்ட ஆட்சியர் தலைமையில் கொண்டாடப்பட்டு வருவதைப் போன்று மாநில அளவில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா கொண்டாட ஆண்டிற்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்படும். உலமா ஓய்வூதியதாரர் இறந்த பிறகு அவரின் குடும்பம் வறுமையில் வாடாமல் இருப்பதற்கு அக்குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: