×

கோடை பருவத்திற்கு தேவையான 2.10 லட்சம் மெட்ரிக் டன் மானிய உரங்கள் இருப்பு: வேளாண் துறை தகவல்

சென்னை:  தமிழக வேளாண் துறை வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் 2022ம் மாத பயன்பாட்டிற்கு 54,800 டன் யூரியா, 26,000 டன் டிஏபி, 15,000 டன் பொட்டாஷ் மற்றும் 46,150 டன் காம்ப்ளக்ஸ் உரங்களை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதுநாள்வரை, 53,420 டன் யூரியா, 10,900 டன் டிஏபி, 4,739 டன் பொட்டாஷ் மற்றும் 16,950 டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் உர நிறுவனங்களால் இந்த மாதத்தில் வழங்கப்பட்டுள்ளன. மேலும், ஒதுக்கீட்டின்படி 97% யூரியா தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட போதிலும், இம்மாத இறுதிக்குள் 15,700 மெ.டன் யூரியா கூடுதலாக வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

டிஏபி உர ஒதுக்கீட்டில் இதுநாள் வரை 42% வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய 15,100 டன் டிஏபி உரம் வழங்குவதற்கு வேளாண்மைத்துறையால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஐபிஎல் நிறுவனத்தால், கங்காவரம் துறைமுகத்திலிருந்து 3,000 டன் டிஏபி உரம் மற்றும் இப்கோ உர நிறுவனத்தால், காக்கிநாடா துறைமுகத்திலிருந்து இவ்வார இறுதிக்குள் 4,500 டன் டிஏபி வழங்கப்படும். மேலும், டிஏபி உரத்தேவையை ஈடுசெய்ய கிரிப்கோ நிறுவனம் இம்மாத இறுதிக்குள் கூடுதலாக 10,000 டன் டிஏபி உரத்தை தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து வழங்கிட இசைவு தெரிவித்துள்ளது. இதில், 70% கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கூட்டுறவு மற்றும் தனியார் விற்பனை மையங்களில் 25,000 டன்னிற்கு அதிகமாக பொட்டாஷ் உரம் இருப்பில் இருந்தபோதிலும், 10,000 டன் பொட்டாஷ் உரத்தினை தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து தேவையின் அடிப்படையில் ஐபிஎல் நிறுவனத்தினால் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தூத்துக்குடி துறைமுகத்தில் 20,000 டன் பொட்டாஷ் சரக்கு கப்பல் வாயிலாக வந்தடைந்துள்ளது. இத்துடன் சேர்த்து, தமிழ்நாட்டின் பயன்பாட்டிற்காக 30,000 டன் பொட்டாஷ் உரம் தூத்துக்குடி துறைமுகத்தில் இருப்பில் உள்ளது. தமிழ்நாட்டில் தற்சமயம், 54,000 டன் யூரியா, 22,800 டன் டிஏபி, 25,500 டன் பொட்டாஷ் மற்றும் 1,07,700 டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் கூட்டுறவு மற்றும் தனியார் விற்பனை மையங்களில் இருப்பில் உள்ளன .

Tags : Department of Agriculture Information , Summer, Metric Tons, Subsidized Fertilizers, Department of Agriculture
× RELATED தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின்...