×

அதிமுக உள்கட்சி தேர்தலை எதிர்த்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்: ஐகோர்ட்டில் ஓபிஎஸ், இபிஎஸ் பதில்

சென்னை:  அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பின் கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. இந்த பதவிகள் அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்டது எனக் கூறி கட்சி உறுப்பினர்களான ராம்குமார் உள்ளிட்ட இருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் அதிமுக, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பதில் தருமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் அர்விந்த் பாண்டியன், ஓ.பன்னீர்செல்வம் சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜய்நாராயண், எடப்பாடி பழனிசாமி சார்பில் வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆகியோர் பதில் மனுக்களை தாக்கல் செய்தனர். அந்த மனுக்களில், மனுதாரர்கள் இருவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் அல்ல. இந்த வழக்கை தாக்கல் செய்ய அவர்களுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை.

 அதிமுகவின் செயல்பாட்டை தடுத்து நிறுத்தும் நோக்கில் சில தனிநபர்களுக்காக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளரின் அதிகாரங்களை ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் வழங்கி 2017 செப்டம்பரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. 2017க்கு பின் நடந்த தேர்தல்களில் கட்சியின் வேட்பாளர்களை அங்கீகரித்து, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

இரட்டை தலைமையை கட்சியினர் விரும்பவில்லை என்று எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே, உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.அப்போது, நீதிபதி, மனுதாரர்கள் வழக்கு குறித்து வெளியிட்ட அறிவிப்புக்கு ஆட்சேபம் தெரிவித்தீர்களா என்று அதிமுக தரப்பு வழக்கறிஞர்களிடம் கேட்டார். அதற்கு வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், ஆட்சேபனை தெரிவித்துள்ளோம் என்றார். இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதி வேல்முருகன் 25ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Tags : EBS , AIADMK, Intra-Party Election, Discount, ICC, OBS, EPS
× RELATED அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி...