×

எம்எல்ஏக்கள், அமைச்சர்களால் முடியாத பிரச்னைகளை உள்ளாட்சி பிரதிநிதிகளால் தான் தீர்க்க முடியும்: பயிற்சி முகாமில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு

சென்னை:  சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கான நிர்வாக பயிற்சி முகாமை  நேற்று  ரிப்பன் கட்டிட வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்  கே. என்.நேரு தொடங்கி வைத்து, பயிற்சி கையேட்டினை வெளியிட்டார். இதில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன்,  சேகர்பாபு, மேயர்  பிரியா,  துணை மேயர்  மகேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

பயிற்சி முகாமில்   அமைச்சர்  கே.என்.நேரு பேசியதாவது:
சென்னை கலைவாணர் அரங்கத்தில் கடந்த 13ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி தலைவர்கள் மற்றும் துணை தலைவர்களுக்கான பயிற்சி வகுப்பும், 18ம் தேதி   பேரூராட்சி தலைவர்கள் மற்றும் துணை தலைவர்களுக்கான பயிற்சி வகுப்பும் நடந்தது. சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களால் நிவர்த்தி செய்ய முடியாத மக்களின் பெரும்பாலான பிரச்னைகள் உள்ளாட்சி பிரதிநிதிகளால் மட்டுமே நிவர்த்தி செய்ய முடியும்.  ஏனென்றால், பொதுமக்களின் அடிப்படை பிரச்னைகளை நாள்தோறும் அறிந்து செயலாற்றி வருகிறீர்கள்.  உங்கள் பகுதியிலே மக்களின் பிரச்னைகளை அணுகி தீர்வு செய்தால் மக்களிடம் உங்களுக்கு மிகப்பெரிய மரியாதை கிடைக்கும்.

மக்களின் அன்றாட பிரச்னைகளை மாமன்றத்திலே எடுத்துரைத்து அதற்கான தீர்வினை காண வேண்டும்.  திட்டப் பணிகளுக்கு தேவையான நிதியினை தமிழ்நாடு அரசிடமிருந்து நிச்சயம் இந்த மாவட்டத்தைச் சார்ந்த அமைச்சர்கள் மற்றும் நானும் இணைந்து பெற்று தருவோம்.   முதல்வர் சென்னை மாநகரின் கட்டமைப்பை சர்வதேச அரங்கில் உயர்த்துவதற்காக தனிக்கவனம் செலுத்தி திட்டங்களை அறிவித்து வருகிறார். எனவே, மாமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நீங்கள் முதல்வரின்  எண்ணங்களை ஈடேற்றும் வகையில் உறுதுணையாக இருந்து உங்களுடைய பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என்றார்.

Tags : Minister ,KN Nehru , MLAs, Ministers, Issue, Local Government Representative, Minister KN Nehru
× RELATED துறையூரில் ரூ.47.50 கோடி மதிப்பில் 2ம்கட்ட புறவழிச்சாலை அமைக்கும் பணி