×

பத்திரிகையாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு திருமண உதவித்தொகை ரூ. 3,000 ஆக உயர்வு: தமிழக அரசு ஒப்புதல்

சென்னை: பத்திரிகையாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு திருமண உதவித்தொகை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக தமிழக உயர்த்தி வழங்க ஒப்புதல்  வழங்கியுள்ளது. செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் தலைமை செயலகத்தில் பத்திரிகையாளர் நல வாரியத்தின் முதல் கூட்டம் நேற்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அரசு செயலாளர் மகேசன் காசிராஜன் முன்னிலை வகித்தார்.  இந்த கூட்டத்தில் செய்தித்துறை அமைச்சர் பேசியதாவது: கடந்த காலங்களில் பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் தற்போது வாபஸ் பெறப்பட்டிருக்கின்றது. அதேபோன்று, கொரோனா காலத்தில், பத்திரிகையாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்து அவர்களுக்கு உதவித்தொகைகள், குடும்ப நல நிதிகள் உயர்த்தப்பட்டு எந்தவித தாமதமும் இன்றி வழங்கப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில், பத்திரிகையாளர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை வழங்கப்பட்டிருக்கிறது. பத்திரிகையாளர் நல வாரியத்தின் மூலமாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள், ஆலோசனைகள் முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, விரைவாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திமுக அரசு பொறுப்பேற்று முதல் நிதிநிலை அறிக்கை கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.  தற்போது 2022-2023ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, ஒவ்வொரு துறைக்கான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. செய்தி மற்றும் அச்சுத் துறையின் மானிய கோரிக்கை வருகிற 27ம் தேதி நடைபெற உள்ளது.

அதற்கு முன்பாக பத்திரிகையாளர் நல வாரிய உறுப்பினர்கள் தெரிவிக்கும் ஆலோசனைகள் முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும். நியாயமான பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் என்று முதல்வர் உறுதியேற்று செயலாற்றி கொண்டிருக்கிறார். எனவே, அதற்கு வலுச்சேர்க்கின்ற வகையில் பத்திரிகையாளர்களுக்கும், அரசுக்கும் ஒரு பாலமாக இருந்து பத்திரிகையாளர்  நல வாரியம் செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் பத்திரிகையாளர் ஓய்வூதியம் கோரி வரப்பெற்ற விண்ணப்பங்களும், பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி கோரி வரப்பெற்ற விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன. அரசாணையில் பத்திரிகையாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு திருமண உதவித் தொகை ரூ.2,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதை ரூ.3,000 ஆக உயர்த்தி வழங்கிட ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் பத்திரிகையாளர் நல வாரியத்தின் அலுவல்சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள தினகரன் நாளிதழின் நிர்வாக இயக்குநர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ், தினத்தந்தி குழுமத்தின் இயக்குநர் சிவந்தி ஆதித்தன் பாலசுப்பிரமணியன்,  மற்றும் தி இந்து நாளிதழின் துணை ஆசிரியர் பி.கோலப்பன், தி வீக் வார இதழின் முதன்மை சிறப்பு செய்தியாளர் லட்சுமி சுப்பிரமணியன், தீக்கதிர் நாளிதழின் செய்தியாளர் எஸ்.கவாஸ்கர், புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சிறப்பு செய்தியாளர் எம்.ரமேஷ் மற்றும் அலுவல்சார் உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் ஜெயசீலன் அனைவரையும் வரவேற்று பேசினார். கூடுதல் இயக்குநர் (மக்கள் தொடர்பு) பாண்டியன் நன்றி கூறினார்.

Tags : Journalist Welfare Board ,Government of Tamil Nadu , Marriage allowance for members of the Journalist Welfare Board is Rs. Rise to 3,000: Government of Tamil Nadu approves
× RELATED மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம்...