×

10.5 சதவீத உள் ஒதுக்கீடு- முதல்வர் சரியான முடிவெடுப்பார் தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீடு சட்டம் கொண்டு வர ஒன்றிய அரசை வலியுறுத்துவோம்; சாதிவாரிய கணக்கெடுக்க அழுத்தம் கொடுப்போம்: அமைச்சர் ராஜகண்ணப்பன் பேச்சு

சென்னை: தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீடு குறித்து சட்டம் கொண்டு வர ஒன்றிய அரசை வலியுறுத்துவோம் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் பேரவையில் பேசினார். தமிழக சட்டப் பேரவையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிக பிற்படுத்தப்பட்டோர் நலன் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பேசியதாவது: பிறமலை கள்ளர் வகுப்பினர் கல்வி மேம்பாட்டிற்காக மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் 295 நல்ல சீரமைப்பு பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது. இவர்களுக்காக, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சுய தொழில் தொடங்கும் வகையில் கடன் வழங்கப்படும்.

10.5 சதவீத இடஒதுக்கீட்டு பற்றி உறுப்பினர் ஜவாஹிருல்லா கேட்டார். இப்போது தான் உச்ச நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்துள்ளது. எனவே முதல்வர் சரியான நேரத்தில், அது குறித்து சரியான முடிவு எடுப்பார். 69 சதவீத இடஒதுக்கீடு என்பது தமிழகத்தின் பிறப்புரிமை. இதை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம். இஸ்லாமியர்களுக்கு தனி இடஒதுக்கீடு 3.5 சதவீதம். இந்த துறைக்கு மொத்தம் 50 சதவீதம், இதில் பிற்படுத்தப்பட்டோருக்கு 30 சதவீதம், மிக பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதம், பட்டியலின மக்கள், ஆதிதிராவிடர்களுக்கு 18 சதவீதம், மலைவாழ் மக்களுக்கு ஒரு சதவீதம் என மொத்தம் 63 சதவீதம். அதில் 50 சதவீதம் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்வர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மையினர் நீங்கலாக கல்வியில் இடஒதுக்கீடு சம்பந்தமாக சட்டம் ஒன்றை கொண்டு வர வேண்டும் என்று இந்த அரசு ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளது. முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் மற்ற படிப்புகளுக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த முதல்வர் முடிவெடுத்துள்ளார். அதன்படி 27 சதவீத இடஒதுக்கீட்டை இந்த ஆண்டில் கொண்டு வர உச்ச நீதிமன்றமே தீர்ப்பு வழங்கியுள்ளது. முதல்வர் எடுத்த முயற்சியால் கிடைத்துள்ளது.
 
ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள உயர் கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கையில் இதர பிற்படுத்தடுப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ஒன்றிய அரசு 2004ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. இதில் கலைஞர் கருணாநிதியின் பங்களிப்பு மிக முக்கியமானது. அவரது முயற்சியின் அடிப்படையில் தான் ஓபிசி பிரிவுக்கு இந்த இடஒதுக்கீடு கிடைத்தது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு இடஒதுக்கீடு முறை உள்ளது. இடஒதுக்கீடு முறையில் வேறுபாடுகளை நீக்குவதற்கு அந்தந்த மாநிலங்களுக்கு இடஒதுக்கீடு முறையை நாம் வைத்து கொள்வதற்கான அதிகாரம் வேண்டும் என்பதை ஒன்றிய அரசை இந்த அரசு வலியுறுத்தும்.
 
ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் ஆகிய கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இடஒதுக்கீடு கொடுப்பது ஒரு பிரச்னையாக இருக்கிறது. இவைகளில் எல்லாம் 27 சதவீத இடஒதுக்கீட்டை ஓபிசி பிரிவினருக்கு கொடுக்க வேண்டும் என்று இந்த அரசு வலியுறுத்தும். அனைத்து சமுதாய மக்களின் கோரிக்கையான சாதி வாரி கணக்கெடுப்பை நாம் கேட்கிறோம். அந்த முடிவை ஒன்றிய அரசு எடுக்க வேண்டியுள்ளதால் ஒன்றிய அரசை வலியுறுத்துவோம்.
 
தனியார் நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வர உள்ளோம். அதை நாம் கொண்டு வர முடியாது. பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு கிடைக்கும் வகையில் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு அவசியம் என்று இந்த அரசு கருதுகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தால் மட்டுமே தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வழங்க இயலும். இதற்கு தேவையான அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஒன்றியை அரசை வலியுறுத்தி கேட்போம். விடுதிகள் கட்ட வழக்கமாக ரூ.7 கோடி தான் ஒதுக்குவார்கள். ஆனால் இந்த ஆண்டு சிறப்பு ஒதுக்கீடாக ரூ.13 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கள்ளர் சீரமைப்பு வாரியம் தொடங்க உள்ளோம். வன்னியர் குல சத்திரியர் வாரியம் என்று உள்ளது. அதற்கு தலைவர், செயலாளர், உறுப்பினர் நியமிக்க உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.



Tags : Chief Minister ,Union Government ,Sativariya ,Minister ,Rajakannappan , 10.5 per cent internal quota- Chief Minister will make the right decision We will urge the Union Government to bring in the Reservation Act in private companies; We will put pressure on the Sativariya census: Minister Rajakannappan's speech
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்