×

இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு மேலும் 18 பேர் வருகை

ராமேஸ்வரம்: இலங்கையில் இருந்து அகதிகளாக 4 குடும்பங்களை சேர்ந்த 18 பேர் தனுஷ்கோடிக்கு வந்தனர். இதையடுத்து தமிழகத்திற்கு வந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய தேவையான உணவு பொருட்கள், எரிபொருள் விலை பலமடங்கு அதிகரித்துள்ளது. இதனால் பல தொழில்கள் நலிவடைந்து ஏராளமானோர் அன்றாட உணவுக்கே கஷ்டப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கையில் உள்ள தமிழர்கள் வாழ்வாதாரம் தேடி தொடர்ந்து தமிழகத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். கடந்த ஏப்.19ம் தேதி இரவு இலங்கை மட்டக்களப்பில் இருந்து தனது 11 வயது, 7 வயது குழந்தைகளுடன் தனியாக இளம்பெண் ஒருவர், தனுஷ்கோடிக்கு வந்தார்.

இலங்கை தலைமன்னார் மாவட்டம் அடம்பன் பகுதி வண்ணாங்குளத்தை சேர்ந்த ஓட்டல் ஊழியர் நகுலேஸ்வரன்(48), அவரது மனைவி ஈஸ்வரி (41) மகன்கள் தனுஷ்(17), பனுஷன்(15), மகள் யதுர்ஷிகா(12), மகன்கள் மிதுலன்(8), வினு(17). மற்றும் அதே பகுதியை சேர்ந்த நதுசன்(21), அவரது மனைவி பியோனா(21), உயிலங்குளத்தை சேர்ந்த இலங்கை நாட்டு முன்னாள் போலீஸ் பிரதீப் (30), அவரது மனைவி கஸ்தூரி (29) இவர்களது மகள்கள் சஸ்மிட்ரா (2), சுஸ்மிட்ரா(4) ஆகிய 13 பேர் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் பைபர் கிளாஸ் படகில் தலைமன்னாரில் இருந்து புறப்பட்டுள்ளனர். இரவு 11 மணியளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் வந்திறங்கினர். இரவு பணியில் இருந்த போலீசார் அவர்களை ராமேஸ்வரம் அழைத்து வந்து, விசாரணை நடத்தினர். படகு கட்டணமாக ரூ.4 லட்சம் கொடுத்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

இதேபோல் இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம், நீர்வேலி வடக்கு பகுதியை சேர்ந்த அந்தோணிசாமி (58), இவரது தாயார் கிட்ணம்மாள்(81), மனைவி மகேஸ்வரி (53), மகன் பிரவீன் டேனியல் (19) மற்றும் இதே பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் (72) ஆகியோர் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மேல் தலைமன்னார் கடற்கரையில் இருந்து படகில் புறப்பட்டு, நேற்று அதிகாலை ராமேஸ்வரம் அருகிலுள்ள சேரான்கோட்டை கடற்கரையில் வந்திறங்கினர். படகு கட்டணமாக ரூ.70 ஆயிரம் கொடுத்ததாக தெரிவித்தனர்.

அனைவரிடமும் ராமேஸ்வரம் கடலோர போலீசார், க்யூ பிரிவு போலீசார் நேற்று காலை விசாரணை நடத்தினர். தொடர்ந்து அனைவரும் மண்டபம் அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இலங்கையில் இருந்து நேற்று அதிகாலை வந்த இலங்கை தமிழர்களையும் சேர்த்து, இதுவரை தலைமன்னார், வவுனியா, முல்லைத்தீவு, திரிகோணமலை பகுதியில் வாழ்ந்து வந்த 15 குடும்பங்களை சேர்ந்த 60 பேர் தமிழகத்திற்கு அகதிகளாக வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Dhanushkodi ,Sri Lanka , 18 more visitors to Dhanushkodi from Sri Lanka
× RELATED இனி மணலில் நடக்க தேவையில்லை தனுஷ்கோடி...