×

ஒடிசாவில் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுப்பு 1,400 ஆண்டு பழமையான மகிஷாசுரமர்த்தினி சிலை: தோண்டத் தோண்ட கிடைக்கும் கோயில்கள்

புவனேஸ்வர்:  ஒடிசா மாநிலத்தில் பல அடி ஆழத்தில் புதைந்திருந்த கோயில் கருவறையில் இருந்து 1,400 ஆண்டுகள் பழமைமிக்க மகிஷாசுரமர்த்தினி சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம், தலைநகரான புவனேஸ்வரில் பல பிரபலமான கோயில்கள் உள்ளன. இவற்றில் ஸ்ரீ  லிங்கராஜ் கோயிலும் ஒன்று. பழைய புவனேஸ்வர் நகரில் உள்ள இக்கோயில் பகுதிகளை அழகுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கோயிலின் சிறிது தூரத்தில் உள்ள  பவானி சங்கர் கோயில், சுகாசாரி கோயில் இடையே அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து வருகிறது. இதில், தோண்டத் தோண்ட  கோயில்களும், சிலைகளும் கிடைத்து வருகின்றன. கடந்த பிப்ரவரியில் சுகாசாரி கோயில் வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வின்போது பழமை வாய்ந்த விஷ்ணு சிலை கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில், பவானி சங்கர் கோயில் பின்புறம் புதைந்துள்ள கோயில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதன் கருவறையில் நேற்று முன்தினம் மகிஷாசுரமர்த்தினி சிலை கிடைத்தது.

இது, 1,400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது அல்லது 7வது நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கும் என்று கருதப்படுகின்றது. மகிஷாசுரமர்த்தினி சிலை மட்டுமின்றி பல்வேறு கல்வெட்டுக்கள், சிற்பங்கள் கண்ெடடுக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், சிலையின் மேல்பகுதி மட்டுமே தோண்டப்பட்டுள்ளதால் அதனை வைத்து அதன் காலத்தை குறிப்பது சரியானதாக இருக்காது என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

புவனேஸ்வரில் அகழ்வாராய்ச்சி நடக்கும் பகுதி முழுவதும் கடந்த ஆண்டு காந்தி நகர் ஐஐடி சார்பில் தரையை ஊடுருவும் ரேடார் கருவி மூலம் ஆய்வு நடத்தப்பட்டது. இது குறித்த அறிக்கையை பகிரங்கப்படுத்தவில்லை. இந்நிலையில், இந்த ஆய்வில் பல முக்கிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக கருதப்படுகிறது. எனவே, இந்த ஆய்வு  அறிக்கையை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வெளியிட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.


Tags : Mahishasuramartini ,Odisha , 1,400-year-old Mahishasuramartini statue unearthed during excavations in Odisha: Temples to be dug
× RELATED பெண் அரசு ஊழியர்களுக்கு 10 நாள் கூடுதல்...