சென்னை கிண்டி ஐ.ஐ.டி.யில் கொரோனா பாதிப்பு 30 ஆக உயர்வு: பரிசோதனை முடிவுகள் வரும் வரை விடுதியிலேயே தனிமைப்படுத்தல்

சென்னை: சென்னை ஐ.ஐ.டி.யில் விடுதியில் தங்கி படித்த 12 மாணவர்களுக்கு கடந்த 20ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு ஆய்வு மேற்கொண்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அங்கு கொரோனா தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், ஐ.ஐ.டி.யில் மாணவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் உள்பட 2 ஆயிரம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிட்டப்பட்டது. இதையடுத்து மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் பணியினை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் 666 பேருக்கு நேற்று முன்தினம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஐ.ஐ.டி.யில் பாதிப்பு எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட அனைவரையும் அங்கேயே தனிமைப்படுத்திக்கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டு, கண்காணிப்பில் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் ஐ.ஐ.டி. விடுதி மூலம் தொற்று பரவியுள்ளது.

 மேலும் ஐ.ஐ.டி.யில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நபர்கள், பரிசோதனை முடிவு வரும் வரை தனிமைப்படுத்திக்கொள்ளவும், ‘தெர்மல் ஸ்கேனர்’ மூலம் தொடர் பரிசோதனை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது தவிர கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெறும் அளவுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை.

தொற்று எண்ணிக்கை சற்று உயரத் தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் முககவசம் மற்றும் தடுப்பூசி கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும். ஐ.ஐ.டி.யை பொருத்தவரை வடமாநிலங்களில் இருந்து பலர் வந்துள்ளனர். அவர்களது மாதிரிகள் மரபியல் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளது என்று மருத்துவத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Related Stories: