இரட்டை இலை லஞ்ச வழக்கில் நான் நிரபராதி என்பதற்கான ஆவணங்களை சமர்ப்பித்தேன்: விசாரணைக்கு பின் டிடிவி தினகரன் பேட்டி

டெல்லி: இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற வழக்கில் டிடிவி தினகரனிடன் நடைபெற்று வந்த விசாரணை நிறைவு பெற்றது. இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக பெங்களூருவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலம், 2017ம் ஆண்டு இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் உள்ளிட்டோரை மீது டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். தற்போது  சுகேஷ் சந்திரசேகர் தவிர மற்றவர்கள் ஜாமீனில் உள்ளனர். இந்த வழக்கில் கடந்த 12ம் தேதி டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் டிடிவி தினகரன் ஆஜரானார்.

அப்போது டிடிவி தினகரனிடம் அமலாக்கத்துறையினர் 11 மணி நேரங்களுக்கும் மேலாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது லஞ்சம் கொடுக்கப்பட்டதற்கு உரிய ஆவணங்கள் இல்லாத போதிலும், சுகேஷ் சந்திரசேகர் கொடுக்கக்கூடிய வாக்குமூலங்களின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டன. இந்நிலையில், இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்றதாக பதிவான வழக்கு தொடர்பாக டெல்லி அமலாக்கத் துறை அலுவலகத்தில் இன்று மதியம் டிடிவி தினகரன் மீண்டும் ஆஜராகி விளக்கம் அளித்தார். அவரிடம் அதிகாரிகள் இரண்டாவது முறையாக கிடுக்கிபிடி விசாரணை நடத்தினர்.

அமலாக்கத்துறையின் 5 மணி நேர விசாரணைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிடிவி தினகரன்; இரட்டை இலை லஞ்ச வழக்கில் நான் நிரபராதி என்பதற்கான ஆவணங்களை சமர்ப்பித்தேன். சுகேஷின் வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். அமலாக்கத்துறையின் விசாரணை நிறைவு பெற்றதாக கருதுகிறேன். கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு கூறினார்.

Related Stories: