×

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில், யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்: சசிகலா அறிக்கை..!

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என சசிகலா தெரிவித்துளார். ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் 2017-ல் கொலை, கொள்ளை நடந்தது. கொண்டாந்து எஸ்டேட் காவலாளியை கொன்று அங்கிருந்த நகை, பணம் முக்கிய ஆவணங்கள் கொள்ளை போனதாக தக்கல் வெளியானது. 5 ஆண்டுகளுக்கு பின் கொடநாடு வழக்கில் விசாரணை தீவிரம் அடைந்துள்ள நிலையில் சசிகலாவிடம் விசாரணை நடைபெற்றது. முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஜெயலலிதா முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் மர்மமான முறையில் விபத்தில் உயிரிழந்தார்.

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டி உள்ளிட்டோரிடம் ஏற்கனவே தனிப்படை விசாரணை நடத்தியுள்ளது. இத வழக்கு தொடர்பாக நேற்று சென்னை தி.நகரில் உள்ள சசிகலாவின் வீட்டுக்கு சென்ற போலீசார் அவரிடம் அடுக்கடுக்கான கேள்விகளை விசாரணை நடத்தி, சசிகலா அளித்த பதில்களை வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். இரண்டாவது நாளாக இன்றும் விசாரணை நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கிய நிலையில் பிற்பகல் 2 மணியளவில் விசாரணை நிறைவு பெற்றது. இன்றைய விசாரணையின் போதும் போலீசார் கேட்ட கேள்விகளுக்கு சசிகலா பொறுமையாக பதில் அளித்துள்ளார். விசாரணை விவரங்கள் அனைத்தும் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்; கொடநாட்டில் உள்ள எங்களது எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக நேற்றும் இன்றும் என்னிடம் விசாரணை நடத்தப்பட்டது. காவல்துறையை காவல்துறையை சேர்ந்தவர்கள் என்னிடம் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் பதில் அளித்து இருக்கிறேன். முழுமையான அளவிற்கு ஒத்துழைப்பு வழங்கி இருக்கிறேன். கொடநாடு எஸ்டேட் என்பது மற்றவர்களுக்கு வேண்டுமானால் ஒரு சாதாரண இடமாக இருக்கலாம் ஆனால் என்னை பொறுத்தவரை, என் அக்கா அவர்கள் மிகவும் நேசித்த இடம்,

அவர்களுக்கு நிறைய மன அமைதியையும், சந்தோஷத்தையும் கொடுத்த ஒரு இடம் உண்டு என்றால் அது கொடநாடு தான். எங்களை பொருத்தவரையில் கொடநாடு பங்களாவை ஒரு கோவிலாக தான் பார்த்தோம். எங்கள் கட்சிக்காரர்களும் அப்படி தான் பார்த்தார்கள். இது போன்றதொரு முக்கியத்துவம் வாய்ந்த எங்களது இடத்தில் விரும்பத்தகாத சம்பவம் நடைபெற்ற சமயத்தில் நானும் சிறையில் இருந்தேன். இந்த சம்பவத்தில் என்னிடம் நெருக்கமாக பணியாற்றிய காவலாளி திரு.ஓம். பகதூர் கொலை செய்யப்பட்டு கொள்ளையும் நடந்துள்ளது. அதோடுமட்டுமல்ல, இந்த சம்பவத்திற்கு தொடர்புடையவர்கள் ஒவ்வொருவராக சந்தேகத்திற்குரிய வகையில் தொடர்ச்சியாக மரணம் அடைந்துள்ளார்கள்.

இதில் எந்த பாவமும் அறியாத சின்ன குழந்தையும் அவரது தாயும் பலியாகி உள்ளனர். எனவே காவல்துறை உரிய விசாரணை மேற்கொண்டு இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். இந்த சம்பவத்திற்கு தங்கள் இன்னுயிரை இழந்த, ஒன்றுமே அறியாத அப்பாவிளான எங்களது காவலாளி திரு.ஓம் பகதூர், பிஞ்சு மனம் மாறாத சின்ன குழந்தை மற்றும் அவரது தாயார் ஆகியோருடைய மரணத்திற்க்கு உரிய நீதி கிடைத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


Tags : Sasikala , Kodanadu murder, robbery case, whoever should be punished: Sasikala report ..!
× RELATED தாராபுரம் அலங்கியத்தில் பறக்கும் படை சோதனையில் ரூ.92 ஆயிரம் சிக்கியது