×

மிரட்டும் கொரோனா!: சீனா ஷாங்காய் நகரில் தொற்று பரவலைத் தடுக்‍க ஊரடங்கு உத்தரவு மீண்டும் நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு..!!

ஷாங்காய்: சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த பிப்ரவரி கடைசி வாரத்திலிருந்து கொரோனா தொற்று பரவத் தொடங்கி தற்போது தீவிரமடைந்துள்ளது. கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் பரவலால் பெரிதாக உயிரிழப்பு ஏதுமில்லை என்றாலும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சீனாவின் மிகப்பெரிய பொருளாதார நகரமாக கருதப்படும் ஷாங்காயில் சுமார் இரண்டரை கோடி பேர் வசித்து வருகின்றனர். இந்நகரில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் கடந்த 3 வாரங்களாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாத நிலை காணப்படுகிறது.

இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. உணவு பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். தினசரி 20ஆயிரம் பேருக்குக் குறைவில்லாமல் தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் நேற்று ஒரேநாளில் 15,698 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மீண்டும் ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ள அந்நகர நிர்வாகம், கொரோனா பாதிப்பு இல்லை என்ற நிலை உருவாகும் வரை இதே நிலை நீடிக்கும் என அறிவித்துள்ளது. இருப்பினும் பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றும் ஷாங்காய் நகர நிர்வாகம் கூறியுள்ளது.


Tags : China ,Shanghai , Corona, China Shanghai, Curfew
× RELATED சீனா, தாய்லாந்தில் இருந்து வரும் வெஸ்டர்ன் ஃப்ராக்ஸ்