×

உத்திரமேரூர் அருகே உபரிநீர் கால்வாயை ஆக்கிரமித்து வீட்டு மனையாக மாற்ற முயற்சி: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே உபரிநீர் கால்வாயை ஆக்கிரமித்து வீட்டு மனையாக மாற்றியவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். உத்திரமேரூர் அருகே பட்டஞ்சேரி கிராமத்தில் சாலையோர விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தை சென்னையை சேர்ந்த சிலர் வாங்கியுள்ளனர். தற்போது அந்த இடத்தை பகுதி பகுதியாக பிரித்து வீட்டு மனை அமைத்து வருகின்றனர்.

இந்த இடத்திற்கு அருகே உத்திரமேரூர் ஏரியில் இருந்து விவசாய நிலத்திற்கு செல்லும் உபரிநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயின் இருபுறங்களிலும் பல்வேறு வகையிலான மரங்களும் அடர்த்தியாக வளர்ந்து அழகுற காட்சியளிக்கிறது. இந்த கால்வாய் வழியாக செல்லும் நீரால், பட்டஞ்சேரி, ஓங்கூர், நல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள சுமார் 300 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் விவசாயிகள், பொதுமக்களுக்கு மட்டுமின்றி கால்நடைகளின் மிக முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது.

இந்நிலையில், விவசாய நிலத்தை வாங்கியுள்ள உரிமையாளர், இந்த கால்வாயில் சுமார் ஒரு ஏக்கருக்கும் மேலாக ஆக்கிரமித்து மனைப்பிரிவாக மாற்றி வருகின்றனர். சுமார் 16 அடி அகலம் கொண்ட இந்த கால்வாய் தற்போது 3 அடியாக சுருங்கி விட்டது. மேலும் கால்வாய் ஓரங்களில் இருந்த சுமார் 50க்கும் மேற்பட்ட மரங்களும் அகற்றப்பட்டுள்ளது. தவிர, இந்த மனை பிரிவுக்கு அருகில் சாராய குட்டை என்று அழைக்கப்படும் குட்டையின் ஒரு பகுதியையும் வீட்டுமனை உரிமையாளர் ஆக்கிரமித்துள்ளார். இதனால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘எங்கள் பகுதி விவசாயத்துக்கு நீராதாரமாக இருக்கும் உபரிநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. விவசாய நிலத்தை வாங்கியுள்ள ஒருவர், ஆக்கிரமித்து வீட்டு மனையாக அமைத்துள்ளார். இதனால் சில கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். மேலும் சாராய குட்டை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. சாலையோர மரங்களும் அகற்றப்பட்டுள்ளது.

இதனால் இயற்கை வளம் பாதிக்கப்படுகிறது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கால்வாயை மீட்க வேண்டும். தமிழக அரசு நீர்நிலை ஆக்கிரமிப்புக்களை அதிரடியாக அகற்றி வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம், எங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு போர்கால அடிப்படையில் இந்த ஆக்கிரமிப்புக்களை அகற்றி கால்வாயை தூர் வாரி நீர்நிலையை ஆக்கிரமித்த ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.



Tags : Utramerur , Attempt to occupy the flood water canal near Uttiramerur and convert it into a house: Farmers urge to take action
× RELATED மாநில அளவில் சிறந்து விளங்கிய அரசு பள்ளி மாணவர்களுக்கான சுற்றுலா