ரிஷியூர் கிராமத்தில் பயிர்களின் மகசூலை அதிகரிக்க கோடை புழுதி உழவுப் பணி

நீடாமங்கலம் : திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ள ரிஷியூர் கிராமத்தில் இயற்கை வேளாண் மையத்தில் நில வழிபாடு செய்து சித்திரை புழுதி உழவு செய்தனர்.

சித்திரை உழவு பத்தரை மாற்றுத் தங்கம் என்று முன்னோர்கள் கூறினார்கள். தை மாதம் அறுவடை முடித்த பிறகு ஒரு சிறிய மழை பெய்து விட்டால் இயற்கையாகவே மண்ணின் ஈரப்பதத்தை காப்பதற்காக வயல் வெளிகளில் களைச்செடிகள் தானாகவே முளைத்து பசும் போர்வை விரித்தது போல காட்சி தரும்.

சித்திரை முதல்நாளில் பொன்னேர் பூட்டி கோடை உழவு செய்வதன் மூலம் களைச்செடிகள் மண்ணுக்குள் சென்று மக்கி மண்ணுக்கு தேவைப்படும் 30 சதம் பசுந்தாள் உரம் இதன்மூலம் கிடைத்துவிடும். மேலும் சாண எரு அடிப்பதன் மூலம் 70 சதம் தொழுஉரம் கிடைப்பதனால் எந்தவித உரச் செலவும் இல்லாமல் முன்னோர்கள் சிறப்பான முறையில் பாரம்பரிய விவசாயத்தில் மகசூல் அதிகரிக்கும் என்பதை உணர்ந்து செயல்பட்டார்கள்.

இது தொடர்பாக இயற்க்கை விவசாயி செந்தில் உமையரசி கூறியதாவது: நம்முடைய மறைந்த ஏபிஜே அப்துல் கலாம் தோல்வியை படிக்கவேண்டும் என்று கூறுவார். இந்த ஆண்டு தோல்வியிலிருந்து கிடைத்த பாடம் என்ன என்றால்? அதிக கோடைமழை காரணமாக உளுந்து மற்றும் பயறு எதிர்பார்த்த விளைச்சலை தராத காரணத்தினால், கோடை உழவு செய்து மண்ணுக்கு உரம் ஆக்கியதாகவும் மேலும் கோடை உழவு செய்வதனால் பூச்சிகள் மற்றும் களைகள் கட்டுப்படுத்தப்படுகிறது என்றும் கூறினார்.

நம்முடைய அரசு அறிவுறுத்தலின்படி மாற்றுப் பயிராக இந்த ஆண்டு கிட்டத்தட்ட 7 ஏக்கர் உளுந்து மற்றும் பயறு, 10 ஏக்கர் எள்ளும் சாகுபடி செய்யப்பட்டது இந்த கோடை மழை காரணமாக எள் சிறப்பாக வளர்ந்து உள்ளது. ஆனால் உளுந்து மற்றும் பயறு பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மண்ணின் வளத்தை பெருக்கும் வகையில் உளுந்து, பயறு மற்றும் களைச் செடிகளை கோடை உழவு செய்து மண்ணுக்கு உரம் ஆக்கியதாகவும், இந்த முறை தோல்வியிலிருந்து கற்ற பாடம் இது என்று கூறினார்.

Related Stories: