×

மஞ்சூரில் மாணவர்களை அச்சுறுத்திய குரங்குகள் பிடிபட்டன

மஞ்சூர் : மஞ்சூரில் பள்ளி மாணவர்களை அச்சுறுத்திய குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மின்வாரிய மேல்முகாமில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. எல்.கே.ஜி முதல் 5ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் சுமார் 130க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், சமீபகாலமாக பள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள மின்வாரிய குடியிருப்பு பகுதிகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள் முகாமிட்டுள்ளன. இந்த குரங்குகள் திறந்திருக்கும் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை வாரி இரைப்பதும், கையில் கிடைக்கும் தின்பண்டங்களை தூக்கி செல்வதும் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

இதுதவிர, இப்பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிக்குள் புகுந்து மாணவர்களை அச்சுறுத்தி தொல்லை கொடுத்து வருகிறது. குறிப்பாக, மதிய உணவு வேளையில் மாணவர்கள் பள்ளி வராண்டாவில் வரிசையாக அமர்ந்து உணவருந்துவது வழக்கம். அப்போது கூட்டமாக வரும் குரங்குகள், மாணவர்களின் கைகளில் உள்ள தட்டுகளை பிடுங்கி உணவுகளை பறித்து செல்கிறது. தடுக்க முயலும் மாணவர்களை மற்றும் ஆசிரியர்களை குரங்குகள் ஆக்ரோஷத்துடன் தாக்க முயல்கிறது.

சமீபத்தில் பள்ளியில் நடைபெற்ற மேலாண்மை குழு தொடர்பான விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான பெற்றோர்களும் பள்ளியில் அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.இதைத்தொடர்ந்து, பள்ளி தலைமையாசிரியை ஜெயந்தி வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து குந்தா ரேஞ்சர் சீனிவாசன் அறிவுறுத்தலின் பேரில் நேற்று முதல் குரங்குகளை பிடிக்கும் பணி துவங்கியது. இதற்காக, பள்ளி வளாகத்தில் கூண்டு வைக்கப்பட்டு அதில் பொரி, கடலை போன்ற தின்பண்டங்கள் வைக்கப்பட்டன.

தின்பண்டங்களால் கவரப்பட்ட குரங்குகள் ஒன்றன்பின் ஒன்றாக சென்று கூண்டில் சிக்கியது. நேற்று காலை முதல் பிற்பகல் வரை 20க்கும் மேற்பட்ட குரங்குகள் பிடிபட்டன. தொடர்ந்து பிடிபட்ட குரங்குகள் முள்ளி வனப்பகுதிக்கு கொண்டு சென்று வனத்துறையினர் விடுவித்தனர்.

Tags : Manzoor , Manzoor: The forest department has captured the monkeys who threatened school children in Manzoor.
× RELATED மஞ்சூர் பகுதியில் பூத்து குலுங்கும்...