×

திருமலையில் தயாரிக்கப்படும் பஞ்சகவ்ய பொருட்கள் ஆன்லைனில் விற்பனை-திருப்பதி தேவஸ்தானம் தகவல்

திருமலை :  திருமலையில் தயாரிக்கப்படும் பஞ்சகவ்ய பொருட்கள் அனைத்தும் இனி, ஆன்லைனிலும் விற்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 15 வகையான பஞ்ச கவ்ய பொருட்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் விற்பனைக்கு வந்தது. இவற்றை தனியார் நிறுவனத்தின் கீழ் கொண்டுவந்து விற்பனை செய்ய தேவஸ்தானம் முடிவு செய்தது.

இதுதொடர்பான ஆலோசனைக்கூட்டம் திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் இணை செயலதிகாரி வீரபிரம்மன் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது வீரபிரம்மன் ேபசியதாவது:திருப்பதி தேவஸ்தானத்தில் தயாரிக்கப்படும் 15 வகையான பஞ்ச கவ்ய பொருட்களை தவிர, கோயிலில் சுவாமிக்கு பயன்படுத்திய பூக்களால் தயாரித்த அகர்பத்தி போன்ற பொருட்களுக்கு பக்தர்களிடம் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. எனவே உற்பத்தி திறனை 15 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரம் பாக்கெட்டுகளாக உயர்த்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், பெங்களூரூ, சென்னை, விசாகப்பட்டினம் மற்றும் ஐதராபாத்தில் உள்ள தகவல் மையங்களில் இந்த பொருட்கள் விற்கப்படுகின்றன. விரைவில் டெல்லி மற்றும் புவனேஸ்வரில் உள்ள தகவல் மையங்களில் பக்தர்களுக்கு கிடைக்கும். இந்த பொருட்கள் நாடு முழுவதும் அதிகளவு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கேற்ப ஆன்லைன்  வர்த்தகத்தில் இப்பொருட்கள் விற்கப்படும். ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தை போன்று பஞ்சகவ்ய பொருட்கள், அகர்பத்தி, போட்டோ ப்ரேம் போன்ற பொருட்கள் சுவாமியின் பிரசாதமாக பக்தர்கள் பெறுகின்றனர். எனவே ஆன்லைன் வணிகத்தில் பக்தர்களுக்கு அதிகளவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



Tags : Thirumalai ,Tirupati Devasthanam , Thirumalai: The Tirupati Devasthanam says that all Panchakavya products made in Thirumalai will now be sold online
× RELATED ஏழுமலையான் கோயிலில் நடிகர் ராம்சரண் தரிசனம்