திருச்சி அருகே பயங்கரம் மனைவியை வெட்டிக்கொன்று விவசாயி தூக்கிட்டு தற்கொலை

தா.பேட்டை : திருச்சி அருகே மனைவியை கொன்று விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.திருச்சி மாவட்டம் தா.பேட்டை ஒன்றியம் அஞ்சலம் மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட்ராமன் (55). விவசாயி. இவரது மனைவி சரஸ்வதி(50). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. இவரது வயலில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக வெங்கட்ராமனுக்கும், அவரது அண்ணனுக்கும் பிரச்னை இருந்து வந்தது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வழக்கு தொடர்பாக செலவு செய்வதற்காக கடந்தவாரம் ஆடுகளை விற்று, கணவரிடம் சரஸ்வதி பணம் கொடுத்துள்ளார். மீண்டும் பணம் தேவைபட்டதால் மனைவியிடம் கறவை மாட்டை விற்று பணம் தருமாறு வெங்கட்ராமன் கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு சரஸ்வதி மறுப்பு தெரிவித்ததால் தம்பதி இடையே நேற்றுமுன்தினம் இரவு தகராறு நடந்துள்ளது.

இந்நிலையில் நேற்று அதிகாலை மீண்டும் தகராறு ஏற்பட்டபோது, ஆத்திரமடைந்த வெங்கட்ராமன், மனைவியை அரிவாளால் கழுத்தில் வெட்டியுள்ளர்.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார். வெங்கட்ராமன் அருகில் இருந்த மரத்தில் ஏறி மாடு கட்டும் கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவ்வழியாக கால்நடைகள் மேய்க்க சென்றவர்கள் வெங்கட்ராமன் தூக்கில் சடலமாக ெதாங்குவதையும், சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்து கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் போலீசுக்கு தெரியாமல் சடலத்தை எரியூட்ட முடிவுசெய்து இருவரது உடலையும் இடுகாட்டுக்கு எடுத்துச் சென்றனர். தா.பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிய வந்தது. இதையடுத்து முசிறி டிஎஸ்பி அருள்மணி, இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்ப இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் இருவரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்வதற்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: