×

மக்கள் நலப்பணியாளர்கள் தொடர்பான வழக்கை விரிவாக விசாரிப்பதற்காக வேறு அமர்வுக்கு மாற்றம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: மக்கள் நலப் பணியாளர்கள் வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளது. மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை தரப்படும் என தமிழக அரசு ஏற்கனவே பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் மக்கள் நலப்பணியாளர்கள் சுமார் 13 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் முன்னதாக பணி நியமனம் செய்யப்பட்ட நிலையில்,கடந்த அதிமுக ஆட்சியில் 13,500 மக்கள் நலப்பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வழக்குகள் தொடரப்பட்டது.அந்த வகையில், உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்குகள் பல ஆண்டு காலமாக நிலுவையில் இருந்து வந்தது. இதனையடுத்து, திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர், கடந்த 3 மாதங்களில் மக்கள் நலப்பணியாளர்களின் பணிநியமனம் தொடர்பான வழக்குகள் 3 முறை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் மக்கள் நலப்பணியாளர்களுக்கு மாதம் ரூ.7500 ஊதியத்துடன் மீண்டும் வேறு பணி வழங்குவது குறித்து தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்திருந்தது.

இதனால், மக்கள் நலப்பணியாளர்கள் வழக்கை 4 வாரங்களுக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், மக்கள் நலப்பணியாளர்கள் தொடர்பான வழக்கை விரிவாக விசாரிப்பதற்காக வேறு அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, விரைவில் இந்த வழக்கு மற்றொரு அமர்வில் விசாரிக்கப்படவுள்ளது.

Tags : Transfer to another session to hear the case of Public Welfare Workers in detail: Supreme Court Order
× RELATED இது உங்கள் ராம ராஜ்ஜியம்: ஆம் ஆத்மி இணையதளம் தொடக்கம்