×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு!: சசிகலாவிடம் 2வது நாள் விசாரணை தொடங்கியது தனிப்படை போலீஸ்..!!

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் தனிப்படை போலீஸ் 2வது நாள் விசாரணையை தொடங்கியது. ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் 2017ல் கொலை, கொள்ளை நடந்தது. கோடநாடு எஸ்டேட் காவலாளியை கொன்று அங்கிருந்த நகை, பணம், முக்கிய ஆவணங்கள் கொள்ளை போனதாக தகவல் வெளியானது. முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஜெயலலிதா முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் மர்மமான முறையில் விபத்தில் பலியானார். அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி உள்ளிட்டோரிடம் ஏற்கனவே தனிப்படை விசாரணை நடத்தியுள்ளது.

5 ஆண்டுக்கு பின் கோடநாடு வழக்கில் விசாரணை தீவிரம் அடைந்துள்ள நிலையில், 2வது நாளாக சசிகலாவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னை தியாகராயர் நகரில் உள்ள வீட்டில் சசிகலாவிடம் தனிப்படை ஐ.ஜி. சுதாகர், நீலகிரி எஸ்.பி. ஆஷிஸ் ராவத் உள்ளிட்டோர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோடநாட்டில் கொள்ளையடிக்கப்பட்ட ஆவணங்களில் சில சென்னை ஓட்டலில் கிடைத்தது பற்றி சசிகலாவிடம் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. சசிகலாவிடம் நேற்று தனிப்படை போலீசார் 100க்கும் மேற்பட்ட கேள்விகளை எழுப்பி பதில் பெற்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதில், கோடநாடு எஸ்டேட் வாங்கியது எப்போது? அங்கு எத்தனை பேர் வேலை பார்க்கிறார்கள்? கோடநாடு பங்களாவில் என்னென்ன ஆவணங்கள், பணம், நகைகள் இருந்தன? கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தை யார் முதலில் சொன்னது? என்பது பற்றியும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியிருந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.


Tags : Kodanad ,Sasikala , Kodanad murder, robbery, Sasikala, investigation
× RELATED கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சந்தோஷ்சாமியிடம் சிபிசிஐடி விசாரணை