×

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்கள்!: இலங்கையில் இருந்து மேலும் 18 அகதிகள் தனுஷ்கோடியில் தஞ்சம்..!!

ராமநாதபுரம்: இலங்கையில் இருந்து 3 படகுகளில் கைகுழந்தைகளுடன் 4 குடும்பங்களை சேர்ந்த 18 பேர் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சமடைந்திருக்கின்றனர். அவர்களிடம் கடலோர காவல் குழுமம் மற்றும் கியூ பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு நாளுக்கு நாள் அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் மக்கள் வேலை வாய்ப்பு இழந்து வாழ்வதற்கு வழியின்றி திண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதியில் இருந்து ஈழ தமிழர்கள் இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வர தொடங்கினர். ஏற்கனவே 11 குடும்பங்களை சேர்ந்த 42 ஈழ தமிழர்கள் அகதிகளாக வந்து மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் 3 படகுகளில் கைகுழந்தைகளுடன் 4 குடும்பங்களை சேர்ந்த 18 பேர் தனுஷ்கோடி வந்து தஞ்சமடைந்திருக்கின்றனர்.

இதையடுத்து கடலோர காவல் குழும போலீசார் மற்றும் கியூ பிரான்ச் போலீசார், தஞ்சமடைந்த அகதிகளை விசாரணைக்காக மண்டபம் கடலோர கவல்குழும காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றிருக்கின்றனர். போலீசாரின் முழு விசாரணைக்கு பின்னர் அகதிகளாக வந்தவர்கள் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட உள்ளனர். இதுவரை மொத்தம் 60 பேர் இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Sri Lanka ,Thanushkodi , Sri Lanka, 18 refugees, Dhanushkodi
× RELATED சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு...