×

ஆம்பூர் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பறையில் ஆசிரியரை ஆபாசமாக திட்டி அடிக்க பாய்ந்த மாணவன்: வீடியோ வைரலானதால் அதிரடி சஸ்பெண்ட்

ஆம்பூர்:  ஆம்பூர் அடுத்த மாதனூர் மேல்நிலைப்பள்ளி வகுப்பறையில் ஆசிரியரை, மாணவன் தகாத வார்த்தைகளில் திட்டி அடிக்க பாய்ந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆதரவாக செயல்பட்ட 2 மாணவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். 21 ஆசிரியர்கள் கல்வி கற்று தருகின்றனர். தாவரவியல் ஆசிரியராக ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த குகையநல்லூரை சேர்ந்த சஞ்சய்காந்தி என்பவர் கடந்த சில வாரங்களுக்கு முன் இடமாற்றம் பெற்று  பணியில் சேர்ந்தார்.

தற்போது செய்முறை தேர்வு நடக்க உள்ளதால் ஆசிரியர் சஞ்சய், மாணவர்களிடம் ரிக்கார்ட் நோட்டை தயார் செய்து சமர்ப்பிக்கும்படி கூறியுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் பிளஸ்2 வகுப்பு ஏ 3 பிரிவில் பாடம் நடத்த சென்றார். அப்போது, ஒரு மாணவன் வகுப்பறையில் படுத்து இருப்பதை கண்டார். அவரிடம் சென்று ரிக்கார்ட் நோட்டு குறித்து கேட்டபோது ஆத்திரமடைந்த மாணவன் ஆசிரியரை தகாத வார்த்தைகளால் திட்டி கையை ஓங்கி அடிக்க முயன்றார். அவருக்கு ஆதரவாக இரு மாணவர்களும் ஆசிரியரை மிரட்டி அவதூறாக பேசினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுபற்றி தகவலறிந்த பள்ளி தலைமையாசிரியர் வேலன், ஆசிரியர் சஞ்சய்யிடம் விசாரித்தார். மேலும், திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி வாணியம்பாடி கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், போலீசார் நேற்று அந்த பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியர், தாவரவியல் ஆசிரியர், அவதூறாக பேசிய 3 மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். இதைதொடர்ந்து, பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் அந்த மாணவன் மீது வரும் 25ம் தேதி விசாரணை நடத்தவும், அதுவரை பள்ளிக்குவர அனுமதி இல்லை எனவும் சஸ்பெண்ட் நோட்டீசை வழங்கினர். உடந்தையாக செயல்பட்ட மேலும் இரு மாணவர்களுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



Tags : Ambur , Ambur, Government High School, Classroom, Student, Video Viral,
× RELATED ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில்...