×

இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை ஒடுக்க இந்தியாவுக்கு பொன்னான வாய்ப்பு: பணத்தை வீசினால் பத்தும் நடக்கும்

இலங்கைக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டுவது என்பது இது முதல் முறையல்ல; புதிதும் அல்ல. கடந்த 1971 மற்றும் 1988ம் ஆண்டுகளில் ஜனதா விமுக்தி பெரமுனா கிளர்ச்சியாளர்களின் போராட்டம், 2004ம் ஆண்டு சுனாமி, ஈழப் போர், போருக்கு பிந்தைய வடக்கு மாகாணத்தின் வளர்ச்சிக்கு நிவாரண நிதி, மறுசீரமைப்பு, மறுவாழ்வுக்கு என இந்தியா இலங்கைக்கு தொடர்ந்து உதவி வந்துள்ளது; வருகிறது. இது தவிர, கடல் சீற்றம் உள்ளிட்ட இயற்கை பேரழிவின் போது பாதுகாத்து கொள்வதற்கான தொடர் உதவிகளையும் இந்தியா வாரி வழங்கி வருகிறது.

ஏனென்றால், தீவு நாடான இலங்கையில் ஏற்படும் அரசியல், சமூக, பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ஸ்திரத்தன்மை ஆகியவை தெற்கு ஆசிய பிராந்தியத்தை பாதிக்கும் பட்சத்தில், முதலில் பாதிக்கப்படுவது இந்தியாவாக தான் இருக்கும். அதனால்தான், இலங்கைக்கு தேவையான மனிதாபிமான, பொருளாதார மற்றும் பாதுகாப்பு உதவிகளை இந்தியா அவ்வபோது உடனடியாக அளிக்கிறது.

இந்தியா இவ்வளவு உதவிகளை செய்து வரும் போதிலும், சுதந்திரம் அடைந்த நாள் முதல் இலங்கை, இந்தியாவை ஒரு அச்சுறுத்தலாகவே பார்க்கிறது. எனவே, இந்தியாவுக்கு விரோதமான ஏதாவதொரு மூன்றாவது நாட்டுடன் நெருக்கம் காட்டுவதன் மூலம் இந்தியாவை எதிர்க்க எப்போதும் முயற்சித்து வருகிறது. அதனால்தான், இந்தியாவிடம் இருந்து உதவிகளைத் தொடர்ந்து பெற்று வரும் நிலையிலும், சீனா, பாகிஸ்தான் என இந்தியாவுக்கு விரோதமான அண்டை நாடுகளுடன் நெருக்கம் காட்டி வருகிறது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியிலும் அதன் கடன் மறுகட்டமைப்புக்கு உதவ சீனா முன்வரவில்லை. இப்போதும் கூட, சீனாவுக்கு கொடுக்க வேண்டிய கடன், அன்னிய செலாவணி கையிருப்பு குறைவு, திவால் போன்ற நிலையிலும் கூட இலங்கைக்கு உதவ முன் வந்துள்ளது இந்தியா. பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள இலங்கை, 2015ம் ஆண்டில் சீனா-கொழும்பு துறைமுக நகர் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. கடந்தாண்டு இயற்கை உரம் வினியோக திட்டத்தையும் ரத்து செய்தது. இந்த இரண்டு திட்டங்களுக்கும் இழப்பீடாக சீனாவுக்கு இலங்கை அரசு வழங்க வேண்டிய தொகை மிக அதிகமாகும்.

இது போன்று, இலங்கையில் முடிக்கப்படாத பல திட்டங்களில் சீனாவின் தலையீடு உள்ளது. இத்திட்டங்கள் உரிய நேரத்தில் முடிந்தால் மட்டுமே இலங்கை சீரான பொருளாதார வளர்ச்சி காண முடியும். இதனால்தான், சீனாவுக்கு எதிரான எந்த நடவடிக்கையிலும் ஈடுபட இலங்கை அரசு தயக்கம் காட்டுகிறது. அமெரிக்காவிற்கு எதிராக ஆயுத பலத்தில் நிகரான வளர்ச்சி கண்டுள்ள சீனா, உலகம் முழுவதையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர நினைக்கிறது. இதனால், தனது ஆயுத பலத்தைக் கொண்டு முடிந்த வரை எல்லையை விரிவாக்கி வருகிறது. தென் சீனக் கடல் பகுதிக்கும் சொந்தம் கொண்டாடி வருகிறது.

தனது எல்லை விரிவாக்கத்திற்கு தொந்தரவாக இருக்கும் இந்தியாவையும் சீனா ஒழித்து கட்ட நினைக்கிறது. அதனால், கிழக்கு லடாக் உள்பட உள்நாட்டு எல்லை பிரச்னைகளை செய்து வருவதுடன், இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கு கடன் கொடுத்து, இந்தியாவுக்கு எதிராக அறிக்கை விடவும், செயல்படவும் தூண்டுகிறது.

உலகின் 2வது மிகப் பெரிய மக்கள்தொகை கொண்ட இந்தியா, அசுர வளர்ச்சி காணும் பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. உலக நாடுகளின் பார்வையில் இந்தியா மிகப் பெரிய பொருளாதார சந்தையாக கருதப்படுகிறது. இதுவும் சீனாவின் கண்களை உறுத்துவதால், இந்தியாவுக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறது. இதற்கான வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த சீனா, கடந்த 2010-14ம் ஆண்டுகளில் இலங்கையில் தனது கால் தடத்தை வலுவாக பதித்தது என்றே சொல்லலாம். இலங்கையை வளர்ச்சி பாதைக்கு எடுத்து செல்ல வேண்டும் என்ற ராஜபக்சே நிர்வாகத்தின் ஏக்கம், இலங்கையின் மனித உரிமை மீறல், போருக்கு பிந்தைய பொருளாதார வளர்ச்சி என எதை பற்றியும் கவலைப்படாமல் கடன் கொடுக்க முன் வந்த சீனாவிடம், இலங்கையை கண்ணை மூடிக் கொண்டு கடன் வாங்க வைத்தது.

இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொண்ட சீனா, இலங்கையில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட தொடங்கியது. இலங்கையில் கடந்த 2015ம் ஆண்டில் ஆட்சி அமைத்த தேசிய ஒற்றுமை அரசு, பொருளாதார பின்விளைவுகளை எண்ணி சீனா உடனான வெளியுறவு கொள்கையை மறுபரிசீலனை செய்யவில்லை. இன்னும் சொல்ல போனால், சீனாவின் பல ஒப்பந்தங்களை ரத்து செய்த இலங்கை அரசு, அம்பந்தொட்ட துறைமுக சிறப்பு பொருளாதார மண்டல ஒப்பந்தத்தில் சீனாவிடம் மாட்டி கொண்டது என்றால் மிகையாகாது. இருப்பினும், புதிய நண்பன் உதவ மாட்டான்; பழயை நண்பனே சிறந்தவன் என்ற அடிப்படையில், இந்த பொருளாதார நெருக்கடியில் இலங்கைக்கு புத்தி வந்துள்ளது.

இதன் காரணமாக, சீன நிறுவனங்களிடம் அளிக்கப்பட்ட 3 மின் உற்பத்தி திட்டங்களை தற்போது இந்தியாவுக்கு அளித்துள்ளது. ஆனால், இதை நினைத்து இந்தியா மகிழ்ச்சி அடைய முடியாது. ஏனென்றால், இதற்கு முன்பு, இந்தியா, இலங்கை, ஜப்பான் இடையே செய்து கொள்ளப்பட்டிருந்த கிழக்கு மின் முனையம் அமைக்கும் ஒப்பந்தம் தற்போது சீனா வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடன் உள்பட பல்வேறு வகையிலான உதவிகளை இந்தியா தொடர்ந்து இலங்கைக்கு அளித்து வந்த போதிலும், அது மட்டுமே இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டு விடாது.

கொழும்பில் சர்வதேச நிதி மையம் அமைத்தல், அம்பந்தொட்ட சிறப்பு பொருளதார மண்டல திட்டம் தொடர்பாக இலங்கை, சீனா இடையே 2015ம் ஆண்டில், 99 ஆண்டு கால ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, இலங்கையின் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் கீழ் அம்பந்தொட்ட துறைமுகத்தை கட்ட 178 ஹெக்டர் நிலபரப்பளவை சீனாவுக்கு தாரை வார்த்த இலங்கை, அதனை நிர்வகிக்க சீன ஹார்பர் இன்ஜீனியரிங் கம்பெனி போர்ட் சிட்டி கொழும்பு பிரைவேட் லிமிடெட் உடன் 99 ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதன்படி, 3வது நபருக்கு மேலும் 99 ஆண்டுகள் இந்த நிலத்தை குத்தகைக்கு விடலாம்.

இந்த இரண்டு முக்கிய திட்டங்கள் மற்றும் பல சிறிய திட்டங்களின் மூலம் இலங்கை மீதான தனது பிடியை சீனா இறுக்கி உள்ளது. அதிலும், குறிப்பாக, ராஜபக்சே நிர்வாகம் ஆட்சி அமைத்த பின்னர், இலங்கையின் பொருளாதாரம், அரசியல் என இரு துறைகளிலும் சீனா ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. கொரோனா பாதிப்பு, ஊரடங்கு ஆகியவற்றினால் இலங்கையின் சுற்றுலா துறை பாதிக்கப்பட்டு, பொருளாதாரம் சரிவடைந்தது. இதனால், இலங்கை தனது நட்பு நாடுகளிடம் இருந்து உதவியை எதிர்பார்க்க நேரிட்டது. இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட நட்பு நாடுகளிடம் இருந்து இலங்கைக்கு நிதி உதவி கிடைத்தது. அதே நேரம், சீனாவிடம் கேட்கப்பட்ட கடன் உதவி குறித்து சீனா வாய் திறக்கவில்லை. இதன் மூலம், சீனாவை மட்டும் நம்பியிருக்க கூடாது என்று பாடம் கற்று கொண்ட இலங்கை, தற்போது அணிசேரா வெளியுறவு கொள்கையை கடைபிடிக்க தொடங்கி உள்ளது.

இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, இலங்கை மீதான சீனாவின் ஆதிக்கத்தை இந்தியாவால் ஒழிக்க முடியுமா? என பல தரப்பிலும் கேள்விகள் முன் வைக்கப்பட்டுள்ளன. இதற்கு ‘இல்லை’ என்றே பதில் கூற வேண்டும். ஆனால், இலங்கை மீதான சீனாவின் ஆதிக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பது மட்டும் நிச்சயம். அதற்கான பொன்னான வாய்ப்பாக, இலங்கையின் பொருளாதார தள்ளாட்டம் தற்போது கை கொடுத்துள்ளது. இதை பயன்படுத்தி இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். ஏனென்றால், பணம் பத்தும் செய்யும். காசு... பணம். துட்டு... மணி... மணி...! இந்தியாவின் வியூகமும் இதுதான்.

ரம்புக்கனாவில் ஊரடங்கு நீக்கம்
இலங்கையில் ராஜபக்சே அரசுக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தில் ரம்புக்கன பகுதியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார். இது மக்களிடையே ராஜபக்சே குடும்பத்தினர் மீதான கொந்தளிப்பை அதிகரித்தது. இதனால், அப்பகுதியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு நேற்று முன்தினம் அதிகாலையுடன் திரும்ப பெறப்பட்டது. இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜிஎல். பீரிஸ், ``துப்பாக்கி சூடு சம்பவம் பற்றிய விசாரணை தொடங்கி உள்ளது. பாகுபாடற்ற விசாரணை நடத்த மனித உரிமை ஆணையத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அரசு நேர்மையுடன் நடந்து கொள்ளும்,’’ என்று கூறினார்.

உலகம் முழுவதும் இதே பேச்சுதான்
வாஷிங்டனில் நடைபெறும் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டத்தில் உலக நாடுகளின் நிதி அமைச்சர்கள், ரிசர்வ் வங்கி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இக்கூட்டத்தில் பங்கேற்ற உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ், ``சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஜி-20 மாநாடுகளில் இலங்கையின் கடும் பொருளாதார நெருக்கடி குறித்து தீவிரமாக கலந்து ஆலோசிக்கப்பட்டது. அதுவே இந்த வாரத்தின் பேச்சு பொருளாக அமைந்தது,’’ என்று தெரிவித்தார்.

நான்காவது முறையாக 40 ஆயிரம் டன் டீசல்  இந்தியா அனுப்பியது
இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள், மின்சார தட்டுப்பாட்டை போக்குவதற்காக இந்தியா தொடர்ந்து, பெட்ரோல், டீசலை வழங்கி வருகிறது. ஏற்கனவே, 3 தவணைகளாக பெட்ரோல், டீசலை அனுப்பி வைத்துள்ளது. கடந்த ஏப்ரல் 2ம் தேதி 40 ஆயிரம் மெட்ரிக் டன் டீசல் வழங்கியது. இந்நிலையில், அங்கு நிலவும் கடுமையான மின்தட்டுப்பாட்டை போக்க, கூடுதலாக 40 ஆயிரம் மெட்ரிக் டன் டீசலை இந்தியா நேற்று கப்பல் மூலம் அனுப்பி வைத்தது. இது, 4வது முறையாகும்.

கடலுக்கு அடியில் மின்சார கேபிள்
இலங்கையின் மின் தேவையில் மூன்றில் இரண்டு பங்கு எரிபொருள், நிலக்கரியை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகிறது. மற்றவை நீர்மின் நிலையங்கள் மூலம் உற்பத்தியாகிறது. இந்நிலையில், இலங்கை நிதி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்சே கடந்த மார்ச் மாதம் இந்தியா வந்த போது, ஒன்றிய மின்துறை அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் கடலுக்கு அடியில் மின்சார கேபிள் மூலம் மின்சாரம் வினியோகிக்கும் திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட திட்டம், தற்போது மீண்டும் செயல் வடிவம் பெற தொடங்கி உள்ளது.

Tags : India ,Sri Lanka , Sri Lanka, China, India,
× RELATED பா.ஜவின் தேர்தல் அலப்பறைகள் கச்சத்தீவு போனது.. பாகிஸ்தான் வந்தது..