×

2 மாத போரில் ரஷ்யாவுக்கு முதல் பிரமாண்ட வெற்றி; வீழ்ந்தது மரியுபோல்: ஈக்களை கூட தப்ப விட கூடாது

கீவ்: உக்ரைனில் இரண்டு மாதம் கடுமையான போராட்டத்திற்கு பின் மரியுபோலை ரஷ்யா கைப்பற்றி உள்ளது. இங்குள்ள இரும்பு தொழிற்சாலையின் பதுங்கு குழியில் இருந்து ஈக்கள் கூட தப்பக் கூடாது என அதிபர் புடின் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். உக்ரைனுக்கு எதிரான முதற்கட்ட போரில் முறையான திட்டமிடல், ஒருங்கிணைப்பு இல்லாததால் பின்வாங்கிய ரஷ்ய படைகள், 2ம் கட்ட போரில் முதலில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக, கருங்கடலில் நிறுத்தப்படிருந்த தனது நாட்டின் மிகப்பெரிய போர் கப்பலை உக்ரைன் ராணுவம் அழித்ததாலும், தனது நாட்டு எல்லைக்குள் புகுந்து உக்ரைன் ஹெலிகாப்டர்கள் தாக்குதல் நடத்தியதாலும் ரஷ்ய அதிபர் புடின் கொதித்தார்.

உக்ரைனின் எல்லா வளங்களை நாசமாக்கி, முக்கிய நகரங்களை கைப்பற்றி உக்ரைன் வீரர்களை சரணடைய வைக்கும்படி ராணுவத்துக்கு அவர் உத்தரவிட்டார். அதன்படி, கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷ்ய கிளர்ச்சியாளர்கள் உள்ள டான்பாஸ் பிராந்தியம், துறைமுக நகரமான மரியுபோல், தலைநகர் கீவ், கார்கிவ், லிலிவ் போன்ற உக்ரைன் முழுவதும் உள்ள நகரங்களில் வர்த்தக துறையில் முக்கிய பங்கு வகிக்கும் தொழிற்சாலைகள், சுரங்கங்கள் மற்றும் ராணுவ ஆலைகள் மீது அதிரடி தாக்குதல்களை ரஷ்யா நடத்தி வருகிறது. முதற்கட்ட போரில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டுமே குறிவைத்து முன்னேறிய ரஷ்யா, தற்போது ஒரே நேரத்தில் நாட்டின் முக்கிய நகரங்களின் மீது ஏவுகணை, குண்டு மழை பொழிந்து வருகிறது.

மேற்கு நாடுகள் என்னதான் ஆயுத உதவிகள் கொடுத்தாலும், பலமிக்க ஆயுதங்களை கொண்ட ரஷ்யாவின் வான், தரை வழி தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் உக்ரைன் திணறுகிறது. இதை நிரூபிக்கும் வகையில், மரியுபோல் நகரத்தை ரஷ்யா நேற்று முழுமையாக கைப்பற்றி தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. இரண்டு மாதமாக விடாமல் மரியுபோலை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வந்த ரஷ்யாவுக்கு இது முக்கிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.

மரியுபோலின் முக்கிய அடையாளமாக கருதப்படும் அசோவ்ஸ்டல் இரும்பு தொழிற்சாலையில் உள்ள பதுங்கி குழியில் ஆயிரக்கணக்கான மக்களும், உக்ரைன் வீரர்களும் பதுங்கி இருந்தனர். அவர்கள் சரணடைய கெடு விதித்தும் சரணடையவில்லை. முதலில் தொழிற்சாலையை தரைமட்டமாக்க நினைத்த புடின், பின்னர் தொழிற்சாலையை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்த மட்டும் உத்தரவிட்டார்.  தற்போது, இந்த தொழிற்சாலையை தவிர மரியுபோலில் அனைத்தையும் ரஷ்யா கைப்பற்றி உள்ளது.   

ரஷ்ய படைகளின் வெற்றி மரியுபோலின் விடுதலை என்று ரஷ்ய அதிபர் புடின் பாராட்டி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘தொழிற்சாலையில் உள்ள சுரங்கத்தில் 2,000 உக்ரைன் வீரர்கள் பதுங்கி உள்ளனர். அவர்களுக்காக தொழிற்சாலையில் ஏறி பதுங்கி குழிக்குள் ஊர்ந்து செல்ல வேண்டிய அவசியமில்லை. ஒரு ஈ கூட தப்பிக்க முடியாதபடி இந்த தொழிற்சாலையை சுற்றி ரஷ்ய படைகள் முற்றுகையிட்டு தடுக்க வேண்டும்’ என்றார்.  

உக்ரைன் பொருளாதாரம் காலி  
உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல் ராணுவம் மற்றும் பொருளாதாரம் முக்கியத்துவம் வாய்ந்தது. ஐரோப்பாவின் பெரிய இரும்பு தொழிற்சாலையும் இங்குதான் உள்ளது. குறிப்பாக, உக்ரைனின் எரிபொருள் உள்ளிட்ட அனைத்தும் மரியுபோல் வழியே ஏற்றுமதி நடந்தது.  தற்போது, ரஷ்யா கைப்பற்றி உள்ளதால், ஏற்றுமதி முற்றிலும் தடைபட்டுள்ளது.

ஒரு பக்கம் போர்... ஒரு பக்கம் பள்ளி...
* மரியுபோலில் ஒரு பக்கம் போர் நடந்து வரும் நிலையில், மறுபக்கம் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
* ரஷ்யா வசமான மரியுபோலில் உள்ள பகுதிகளில் பள்ளிகள் திறக்கப்பட்டன. அங்கு ரஷ்ய பாடத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுகிறது.
* ரஷ்யா வசமான பகுதிகளில் 60 வயதானவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

* உக்ரைனில் பிடிபட்ட இங்கிலாந்து போராளிகளுக்கு உணவு, தண்ணீர் மற்றும் தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
* உக்ரைனின் கிரெமின்னாவைக் கைப்பற்றிய ரஷ்யா, தற்போது ரூபிஸ்னே, போபாஸ்னா நகரங்கள் மற்றும் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளை கைப்பற்ற தீவிர சண்டையிட்டு வருகிறது.
* ரஷ்ய மற்றும் உக்ரைன் அதிபரை அவர்களின் நாட்டின் தலைநகரங்களில் சந்தித்து போர் நிறுத்த குறித்து பேச விரும்புவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ கட்டரெஸ் கடிதம் எழுதி உள்ளார்.
* கீவ் பிணவறைகளில் 1,020 பொதுமக்கள் உடல்கள் இருப்பதாக உக்ரைன் அதிகாரி தெரிவித்து உள்ளார்.
* போருக்கு பின்னர் உக்ரைனில் இருந்து 50 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் நாட்டை விட்டு வெளியேறி உள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
* உக்ரைன் சென்றுள்ள ஸ்பெயின், டென்மார்க் பிரதமர்கள், கீவ்வில் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
* மரியுபோல் நகரை சுற்றி உள்ள கார்கிவ், டான்பாஸ் பிராந்தியத்தில் உள்ள டோனெட்ஸ்க் பகுதி மீது தீவிர குண்டுவீச்சு நடந்து வருகிறது.
* டான்பாசில் உள்ள லுஹான்ஸ்க் பிராந்தியத்தின் 80 சதவீத பகுதிகளை ரஷ்யா தனது கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.

Tags : Russia ,Mariupol , Russia, the first great conqueror, fell Mariupol, not letting even the flies escape
× RELATED ரஷ்யாவில் உயர்கல்வி பயில...