×

சூப்பர் கிங்சுக்கு எதிராக திலக் வர்மா அரை சதம்

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், திலக் வர்மாவின் அரை சதத்தால் மும்பை இந்தியன்ஸ் கவுரவமான ஸ்கோரை எட்டியது. டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீசியது. கேப்டன் ரோகித், இஷான் கிஷன் இருவரும் மும்பை இந்தியன்ஸ் இன்னிங்சை தொடங்கினர். முகேஷ் சவுதாரி வீசிய முதல் ஓவரின் 2வது பந்தில் ரோகித் ஷர்மாவும், 5வது பந்தில் இஷான் கிஷனும் டக் அவுட்டாகி நடையை கட்ட... மும்பை அதிர்ச்சி தொடக்கத்தை சந்தித்தது.

டிவால்ட் பிரெவிஸ் 4 ரன் எடுத்து முகேஷ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் தோனியிடம் பிடிபட்டது, மும்பை அணிக்கு மேலும் நெருக்கடியை கொடுத்தது. வழக்கம்போல அதிரடியை காட்டிய சூரியகுமார் 32 ரன் (21 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி, சான்ட்னர் பந்துவீச்சில் முகேஷிடம் பிடிபட, மும்பை 7.3 ஓவரில் 47 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், திலக் வர்மா - ஹ்ரிதிக் ஷோகீன் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்கப் போராடினர். ஷோகீன் 25 ரன் எடுத்து (25 பந்து, 3 பவுண்டரி) பிராவோ வேகத்தில் உத்தப்பாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். போலார்டு 14 ரன், டேனியல் சாம்ஸ் 5 ரன்னில் பெவிலியன் திரும்பினர். சக வீரர்கள் கை கொடுக்காவிட்டாலும், கடுமையாகப் போராடிய திலக் வர்மா அரை சதம் அடித்தார். கடைசி கட்டத்தில் ஜெய்தேவ் உனத்கட் அதிரடி காட்ட, மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன் குவித்தது.

திலக் வர்மா 51 ரன் (43 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), உனத்கட் 19 ரன்னுடன் (9 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். சென்னை பந்துவீச்சில் முகேஷ் சவுதாரி 3, டுவைன் பிராவோ 2, சான்ட்னர், தீக்‌ஷனா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 156 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது.

Tags : Tilak Verma ,Super Kings , Super Kings, Tilak Verma, half century
× RELATED ருதுராஜ் 69, ஷிவம் துபே 66* சூப்பர் கிங்ஸ் 206 ரன் குவிப்பு