கோயம்பேட்டில் ஆவின் பதப்படுத்தும் நிலையம் கடற்கரை, மால்களில் ஐஸ்கிரீம் மோர், லஸ்சி விற்க நடவடிக்கை: பேரவையில் பிரபாகர்ராஜா எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை: சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின்போது விருகம்பாக்கம் தொகுதி எம்எல்ஏ பிரபாகர்ராஜா (திமுக) பேசியதாவது:

சென்னையில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளான அம்பத்தூர், சோழிங்கநல்லூர், மாதவரம் பகுதிகளில் மட்டும்தான் ஆவின் பொருட்கள் தயாரிக்கப்படும் நிலையங்கள் உள்ளன. கோயம்பேடு மார்க்கெட் மிகப்பெரிய வர்த்தக பகுதியாக உள்ளதால், இங்கு பால் பதப்படுத்தும் நிலையம் அமைக்க வேண்டும். விருகம்பாக்கம் தொகுதியிலுள்ள ஓஎஸ்ஆர் இடங்களில் ஆவின் நிறுவன பொருட்களை விற்பனை செய்யும் ஒரு ஆவின் பூங்கா அமைக்க வேண்டும்.

அமைச்சர் சா.மு.நாசர்: அம்பத்தூரிலிருந்து விருகம்பாக்கம் சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவு மட்டுமே இருக்கிறது. ஏற்கெனவே இணையத்தில் 3 பால் பதப்படுத்தும் நிலையங்கள் இருப்பதால், புதியதாக விருகம்பாக்கம் தொகுதியில் பால் பதப்படுத்தும் நிலையம் அமைக்க சாத்தியக்கூறுகள் இல்லை. பிரபாகர்ராஜா: இது கோடை காலம் என்பதால், பொதுமக்கள் ஐஸ்கிரீம், லஸ்சி, மோர் ஆகியவற்றை வாங்கி பருகும் நேரம்.

ஆகவே, மேலைநாடுகளில் உள்ளது போல, ஷாப்பிங் மால்கள், மெரினா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரைகளில் அரசு ஸ்டிரிட் வென்டிங் மெஷின் மூலம் விற்பனை செய்ய வேண்டும். ஆவின் நூடுல்ஸ் பல இடங்களில் கிடைப்பதில்லை. இதை அதிகளவில் கிடைப்பதற்கு அரசு பரிசிலனை செய்ய வேண்டும். அமைச்சர் சா.மு.நாசர்: நூடுல்ஸ் அண்மையில் தான் முதல்வரால் அறிமுகம் செய்யப்பட்டது. அதை தேவைக்கேற்ப தயார் செய்துகொண்டிருக்கிறோம். தேவை அதிகம் இருப்பின் கூடுதலாக உற்பத்தி செய்யப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Stories: