திமுக- அதிமுக காரசார விவாதம் தாலிக்கு தங்கம் திட்டத்தில் குறைபாடு இருந்ததால் தான் மாற்றினோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தாலிக்கு தங்கம் திட்டத்தில் குறைபாடு இருந்த காரணத்தால் தான் அதை மாற்றி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் பணி நடைபெற்று வருகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். இதனால் பேரவையில் திமுக- அதிமுக உறுப்பினர்களிடையே காரசார விவாதம் நடைபெற்றது. தமிழக சட்டப் பேரவையில் நேற்று மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மற்றம் சமூகநலன், மகளிர் உரிமைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு மதுராந்தகம் தொகுதி உறுப்பினர் மரகதம் குமரவேல்(அதிமுக) பேசுகையில், ‘‘தாலிக்கு தங்கம் திட்டத்தில் தவறு நடப்பதால் அதை ரத்து செய்யப்பட்டதாக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.தவறு இருந்தால் அதை திருத்தலாமே தவிர திட்டத்தை முழுவதும் ரத்து செய்யவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை’’ என்றார்.

அமைச்சர் கீதா ஜீவன்:  2018-19ம் ஆண்டில் இருந்து இந்தத் திட்டத்தின் பயனை நீங்கள் கொடுக்கவே இல்லை. தங்கத்தையும், நிதியுதவியையும் கொடுக்காமல் கிடப்பில் போடப்பட்டது. தற்போது கொண்டு வரப்பட்டுள்ள திட்டத்தின் மூலம் குழந்தைத் திருமணம் நடக்காது என்பது  மட்டுமல்ல, எல்லாவற்றிலும் பெண்களின் நிலை உயரும். அப்படியே கிடப்பில் போட்டதினால் அது பெரிய சுமையாக மாறிவிட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி: நாங்கள் அந்த திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டதாக அமைச்சர் கூறினார். ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நபர்கள் தேர்வு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை கொடுத்து வந்தோம். ஆனால் இடையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்திற்கு வந்தது. டெண்டர் விட்டு அதை இறுதி செய்த பிறகுதான் அந்த திட்டத்தை செயல்படுத்த முடியும். தங்கத்தின் விலையில் ஏற்றம், இறக்கம் இருந்ததால் டெண்டர் எடுக்க யாரும் முன்வரவில்லை. அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுப் பெறுங்கள். அதே அதிகாரிகள்தான் இப்போதும் இருக்கின்றனர். அந்தத் திட்டத்தை குறை சொல்லக்கூடாது. அது அற்புதமான திட்டம். அதில் குறைபாடுகள் இருந்தால் அதை நீக்கி, சரி செய்யுங்கள்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: இந்தத் திட்டத்தை மோசம் என்று நாங்கள் கூறவில்லை. அதிலுள்ள குறைபாடுகளை தான் சொன்னோம். 3 ஆண்டு காலமாக இருக்கக் கூடிய நிலுவை விண்ணப்பங்கள் பற்றி அமைச்சர் கூறியுள்ளார். அந்தத் திட்டத்திற்குப் பதிலாக இப்போது கொண்டு வரப்பட்டுள்ள திட்டம் மூலம் இப்போது மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கக்கூடிய பணிகள் நடைபெறுகிறது. அதில் பல பலன்கள் உள்ளன.

எடப்பாடி பழனிசாமி: திட்டத்திலோ, நிர்வாகத்திலோ குறைபாடு இருந்தால் அதை நீக்கிவிட்டு திட்டத்தைத் தொடர வேண்டும் என்பதுதான் என் கோரிக்கை.

முதல்வர் மு.க.ஸ்டாலின்: குறைபாடு இருந்த காரணத்தினால் தான் அதை மாற்றி இருக்கிறோம். திமுக ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களையெல்லாம் நீங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு எதையெல்லாம் மாற்றினீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.

* பேரவையில் இன்று...

தமிழக சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்கும். கேள்வி நேரம் முடிந்ததும், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடக்கிறது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் பேசுகிறார்கள். இறுதியாக, தங்கள் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர்கள் வெளியிடுகின்றனர்.

* சட்டப்பேரவை மாடத்தில் முதல்வர் மனைவி, மகள்

சென்னை: தமிழக சட்டபேரவையில் நேற்று மாற்று திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மானியக்கோரிக்கை விவாதம் நடந்தது. காலை 10 மணிக்கு அவை கூடியதும் கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்பட்டது. உறுப்பினர்கள் கேள்விக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளிட்டார். இந்த நிலையில் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை பார்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்க்கா, மகள் செந்தாமரை, மருமகள் கிருத்திகா உதயநிதி, பேரன் நலன் ஆகியோர் வந்திருந்தனர். அவர்கள் சட்டப்பேரவை மாடத்தில் அமர்ந்து சட்டசபை நிகழ்ச்சிகளை பார்த்தனர். முதல்வர் 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பை முழுவதுமாக கேட்டனர். மேலும் மாற்று திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மானியக்கோரிக்கை விவாதத்தில் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பேசினார். அவர் பேச்சு முழுவதையும் குடும்பத்தினர் ரசித்து கேட்டனர்.

Related Stories: